அல்பேனியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அகதிகள் மீண்டும் இத்தாலிக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
பாங்களாதேஷ், எகிப்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஏராளமானோர் அகதிகளாக ஐரோப்பிய நாடுகளுக்கு குடியேறுகின்றனர். ஆனால் இந்த அகதிகள் குடியேற்றத்தால் அங்கு சட்ட ஒழுங்கு கடுமையாக பாதிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை கட்டுப்படுத்த எல்லை பகுதிகளில் ஐரோப்பிய நாடுகள் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளன. இதற்கிடையே கடந்த ஆண்டு சுமார் 66 ஆயிரம் பேர் அகதிகளாக இத்தாலியில் குடியேறியுள்ளனர்.
எனவே அகதிகள் குடியேற்றத்தை தடுக்க அந்நாட்டு அரசாங்கம் கடுமையான நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் இத்தாலிக்குள் நுழைய முயன்ற 50 பேரை கைது செய்த அந்நாட்டின் கடலோர பொலிஸார் அல்பேனியாவில் உள்ள அகதிகள் முகாமில் தங்க வைத்துள்ளனர்.
பின்னர் அங்கிருந்து அவர்களை நாடு கடத்த அரசாங்கம் முடிவு செய்தது. ஆனால் அவர்களை நாடு கடத்துவதற்கு தடை விதித்து இத்தாலி நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து அல்பேனியாவில் இருந்த சுமார் 50 அகதிகள் படகு மூலம் இத்தாலிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.