அவுஸ்திரேலியாவுக்கு எதிராக நேற்று ஆரம்பமான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் இலங்கை அணி 9 விக்கெட் இழப்புக்கு 229 ஓட்டங்களை பெற்றிருந்தது.
தினேஷ் சண்டிமால் மற்றும் குசால் மெண்டிஸ் ஆகியோரின் அரை சதங்கள் இலங்கையை ஆட்டத்தில் நிலைநிறுத்தியது.
காலியில் நேற்றுக் காலை ஆரம்பமான போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கியது இலங்கை.
எனினும், பெரிய முதல் இன்னிங்ஸ் ஓட்ட எண்ணிக்கையை பெறுவதற்கான அவர்களின் நம்பிக்கை நிறைவேறவில்லை.
கடுமையான வெப்பம் மற்றும் ஈரப்பதம் இருந்தபோதிலும், அவுஸ்திரேலியா தனது திட்டங்களுக்கு அமைவாக சிறந்த பந்து வீச்சுகளும், பந்து வீச்சினையும் மேற்கொண்டது.
இலங்கை அணியின் முன்னணி வீரர்களான பத்தும் நிஸ்ஸங்க, அஞ்சலோ மெத்தியூஸ், கமிந்து மெண்டீஸ், தனஞ்சய டிசில்வா ஆகியோர் சொப்ப ஓட்டங்களுடனும், எதுவித ஓட்டமின்றியும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.
தனது 100 ஆவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் விளையாடி திமுத் கருணாரத்னவும் 36 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
இருந்த போதிலும், திமுத் கருணாரத்ன மற்றும் சண்டிமால் இடையேயான இரண்டாவது விக்கெட்டுக்கு 70 ஓட்டங்கள் இணைப்பாட்டம் இலங்கையின் இன்னிங்ஸுக்கு உதவியது.
தினேஷ் சண்டிமால் 74 ஓட்டங்களையும், குசல் மெண்டீஸ் 58 ஓட்டங்களையும் பெற்றது முதல் இன்னிங்ஸில் இலங்கையை நிலைநிறுத்தியது.
பந்து வீச்சில் அவுஸ்திரேலிய அணி சார்பில் மிட்செல் ஸ்டார்க் மற்றும் நாதன் லியோன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், மேத்யூ குஹ்னெமன் 2 விக்கெட்டுகளையும் அதிகபடியாக வீழ்த்தினர்.
இந்தப் ஆட்டத்தில் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ஏழாவது இலங்கை வீரர் என்ற பெருமையை திமுத் கருணாரத்ன பெற்றார். இந்த டெஸ்டுக்கு பிறகு ஓய்வு பெறுவதாக முன்னாள் தலைவர் அறிவித்துள்ளார்.
இன்று போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமாகும்.