காதலர் வாரத்தின் முதல் நாளான ரோஸ் (ரோஜா) தினம் பெப்ரவரி 7ஆம் திகதி கொண்டாடப்படுகிறது. காதலின் அடையாளங்களில் ஒன்றாக விளங்கும் ரோஜா பூவை காதல் உறவுக்கு கொடுத்து மகிழ்வதில் காதலர் வார கொண்டாட்டம் தொடங்குகிறது. அன்பு, பாசம், ஒருவருக்கு மற்றொருவர் மீதான ஆர்வம் ஆகியவற்றை குறிக்கும் ரோஜா பூக்களை காதல் உறவுடன் பகிர்ந்து உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதே ரோஸ் தினம் ஆகும். ஒரு ரோஜா அல்லது ரோஜா கொத்தாக இருந்தாலும் காதல் உறவின் ஆழத்தை அது குறிக்கிறது. காதலர் தினத்தன்று காதலர்கள் கையில் ரோஜா பூவோடு சுற்றுவதற்கு இதுவே காரணம்.
ரோஸ் தினம் வரலாறு
ரோஸ் தினம் எப்போது தோன்றியது என்பதற்கு போதுமான தரவுகள் இல்லை. பண்டைய காலங்களிலேயே அன்பின் அடையாளமாக ரோஜா கொடுக்கும் வழக்கம் இருந்துள்ளது. ரோமானிய புராணங்களில் காதல் கடவுளான வீனஸுடன் ரோஜா பூ தொடர்புபடுத்தப்படுகிறது. காதலை வெளிப்படுத்த உதவும் ரோஜா பூவை பல ஆண்டுகளாக காதலர்கள் போற்றி வந்துள்ளனர். ஒவ்வொரு நிறத்திலான ரோஜாவுக்கு தனித்தனி அர்த்தமுண்டு. உதாரணமாக சிவப்பு ரோஜா ஆழமான அன்பின் வெளிப்பாடாகும். இங்கு மட்டுமல்ல உலகமெங்கும் ரோஜா பூ அன்பின் சின்னமாக பார்க்கப்படுகிறது.
ரோஸ் தினம் முக்கியத்துவம்
காதலர் வாரத்தில் நீங்கள் காதலை எளிமையான முறையில் வெளிப்படுத்த ரோஜா பூ உதவுகிறது. ஒரு சிறிய ரோஜா பூவுக்கு காதல் உறவில் மிகுந்த மதிப்பு உண்டு. நான் உன்னை காதலிக்கிறேன் என நேரடியாக சொல்வதை ஒற்றை ரோஜா பூ மறைமுகமாக சொல்லிவிடும். நீங்கள் ஒருவரிடம் ரோஜா பூ கொடுத்து அவர்கள் அதை ஏற்றுக்கொண்டால் காதல் வாழ்க்கை இனிதே தொடங்கியதாக அர்த்தம். ரோஜா தினத்தன்று மட்டுமல்ல காதலர் வாரத்தின் ஒவ்வொரு நாளிலும் உங்களுடைய காதல் உறவுக்கு ரோஜா பூ கொடுக்கலாம்.
ரோஜா பூ நிறங்களின் அர்த்தம்
காதலை வெளிப்படுத்த பலரும் சிவப்பு ரோஜா வாங்குகின்றனர். எனினும் ஒவ்வொரு ரோஜாவுக்கும் தனி அர்த்தமுண்டு.
• சிவப்பு ரோஜா – நான் உன்னை காதலிக்கிறேன் என்பதை நேரடியாக வெளிப்படுத்தும் போது கொடுக்கலாம். இது ஆழமான அன்பை குறிக்கிறது.
• மஞ்சள் நிற ரோஜா – நட்பு, மகிழ்ச்சி
• இளஞ்சிவப்பு நிற ரோஜா – வசீகரம்
• வெள்ளை நிற ரோஜா – புனிதமான உறவு, புதிய தொடக்கத்தின் வெளிப்பாடு
• ஊதா நிற ரோஜா – முதல் பார்வையிலேயே ஈர்க்கப்பட்டு காதலில் விழுந்ததாக அர்த்தம்.