அமெரிக்க அரசின் சார்பில் உலகெங்கிலும் மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்காக 1960களின் முற்பகுதியில் அமெரிக்காவின் 35ஆவது ஜனாதிபதியான ஜோன் எப். கெனடியின் ஆட்சிக் காலத்தில் (John F. Kennedy) ஸ்தாபிக்கப்பட்ட ஸ்தாபனம் United States Agency for International Development ஆகும்
இந்த முகமையின் கீழ் 10,000 ஊழியர்கள் பணியாற்றிவரும் நிலையில், இதில் மூன்றில் இரண்டு பகுதியினர் வெளிநாடுகளில் பணியாற்றிவருகின்றனர். 60 நாடுகளில் பணிக்கான தளங்களை கொண்டுள்ள இந்த முகமை, இதற்கும் மேலாக பல்வேறுப்பட்ட நாடுகளில் பணிகளையும் மேற்கொண்டு வருகிறது.
இருப்பினும் பெரும்பாலான களப்பணிகளை மற்ற அமைப்புகளை பயன்படுத்தி ஒப்பந்த அடிப்படையிலோ, நிதி உதவி அளித்தோ USAID செய்து வருகிறது. இந்த அமைப்பு மேற்கொள்ளும் பணிகள் விரிவானவை. உதாரணத்திற்கு பட்டினியால் பாதிக்கப்பட்ட நாடுகளில் உணவு அளிப்பதோடு, உலக அளவில் பஞ்சத்தை அளவிடும் அமைப்பையும் இயக்கி வருகிறது.
இந்த அமைப்பானது தரவுகளை ஆராய்ந்து எந்த நாட்டில் உணவுப் பற்றாக்குறை ஏற்படக் கூடும் என்பதை முன்கூட்டியே கணிக்கும் பணியைச் செய்கிறது.
USAIDன் நிதியில் கணிசமான அளவு சுகாதாரம் சார்ந்த பணிகளுக்காக செலவிடப்படுகிறது. போலியோ பாதிப்பு இன்னமும் தீர்க்கப்படாத நாடுகளில் தடுப்பூசி வழங்குவது மற்றும் பெருந்தொற்றுக்களை ஏற்படுத்தும் வைரஸ் பரவலை தடுப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
2024ம் ஆண்டு அறிக்கையின் படி, USAID அமைப்பானது 3.23 மில்லியன் டொலர்களை நிதியாக வழங்கியதன் மூலம் அந்த நிதியாண்டின் 2வது மிகப்பெரிய நன்கொடையாளராக மாறியிருந்தது.
இந்நிலையில் தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவால் வழங்கப்படுகின்ற நிதி தொடர்பான வெளிநாட்டு திட்டத்தை 90 நாட்களுக்கு இடைநிறுத்தி வைக்கும் வகையிலான ஆவணத்தில், கடந்த ஜனவரி 20ஆம் திகதி கையெழுத்திட்டார்.
இந்த உத்தரவுக்கு அமைய, சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்காவின் USAID அமைப்பால் இலங்கையில் முன்னெடுக்கப்படும் பல திட்டங்கள் தற்போது கைவிடப்பட்டுள்ளன.சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்காவின் USAID ஆல் நடத்திச் செல்லப்படுகின்ற அதிகாரப்பூர்வ இணையதளம் உள்ளிட்ட தளங்கள் செயலிழந்துள்ளன.
கடந்த 1961ஆம் ஆண்டு முதல் சுகாதாரம், கல்வி மற்றும் தொழில்நுட்ப பயிற்சி, விவசாயம், வாழ்வாதார அபிவிருத்தி, சுற்றாடல், இயற்கை வளங்களின் முகாமைத்துவம், உள்ளூராட்சி மன்றங்கள், மனிதாபிமான உதவித் திட்டங்கள் போருக்குப் பின்னரான காலத்தில் நிலைமாற்று நியாயத்திற்கான துறைகள் உள்ளிட்ட விடயங்களில் அமெரிக்கா உதவி வழங்கும் திட்டங்களை நாட்டிற்குள் முன்னெடுத்திருந்தது.
இலங்கையில் முன்னெடுக்கப்படுகின்ற இந்தத் திட்டங்களுக்காக சுமார் 2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட்டுள்ளதாக சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க நிறுவனமான USAID -இன் ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கம் மற்றும் அரசு சார்பற்ற அமைப்புகளுக்கு திட்டங்களை நடைமுறைப்படுத்த நிதியுதவிகளை இந்த நிறுவனம் வழங்கியுள்ளது. இருந்தாலும் இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் இதுவரையில் இந்த திட்டத்தினால் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டுள்ள செயல்திட்டங்கள் முழுமையாக இடை நிறுத்தப்படுமா அல்லது திட்டமிட்டபடி தொடருமா என்பதை இன்னுமே உறுதிசெய்யவில்லை. அத்துடன் வாசிங்டன் நகரிலுள்ள காரியாலயத்தில் இது தொடர்பாக நாங்கள் பதிலை எதிர்பார்த்து காத்திருக்கிறோம், அவர்கள் அறிவித்த பிறகு இலங்கை தொடர்பான USAID -இன் நிலை தொடர்பில் முழுமையாக அறிவிப்போம் என இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இருந்தாலும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் இந்த தீர்மானத்திற்கு எதிராக தற்போது USAID -அமைப்பு நீதிமன்றத்தை நாடியிருந்தது. பின்னர் USAID என்ற சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தின் 2,200 பணியாளர்களை கட்டாய விடுமுறையில் அனுப்பும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் திட்டத்தை அமெரிக்க நீதிமன்றம் தற்காலிகமாக தடுத்துள்ளது.
இரண்டு தொழிற்சங்கங்கள் முன்வைத்த மனுவொன்றுக்கு அமைய இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
மிகவும் வரையறுக்கப்பட்ட வகையில் இந்த தற்காலிக தடையுத்தரவை பிறப்பிப்பதாக நீதிபதி கார்ல் நிக்கோல்ஸ் அறிவித்திருந்தார். அதேவேளை வோஷிங்டன் டி.சி.யில் உள்ள USAID இனது தலைமையகத்தில் உள்ள அதிகாரிகள் வெளியேற்றப்பட்டு அதனை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
அமெரிக்காவில் வரி செலுத்துவோரின் மதிப்புமிக்க பணம் USAID ஊடாக முறையற்ற விதத்தில் பயன்படுத்தப்படுவதாக டொனால்ட் ட்ரம்ப் குற்றஞ்சாட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் நாம் பொறுத்திருந்து பார்ப்போம் இதனால் இலங்கை உட்பட உலகநாடுகளுக்கு ஏற்படப்போகும் மாற்றம் என்ன என்பதை…