இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார்.
இந்த பயணத்தின் போது, மோடி வியாழன் அன்று (13) அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
வர்த்தகம், எரிசக்தி, பாதுகாப்பு, தொழில்நுட்ப கூட்டாண்மை மற்றும் மூலோபாய ஒத்துழைப்பு உள்ளிட்ட பரஸ்பர நலன்கள் குறித்து இதன்போது இரு தலைவர்களும் விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வொஷிங்டனை சென்றடைந்ததும் எக்ஸ் கணக்கில் பதிவொன்றை இட்ட பிரதமர் மோடி, இந்தியா-அமெரிக்க கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்த, ஜனாதிபதி டர்ம்பை சந்திக்க ஆவலுடன் இருப்பதாகக் கூறினார்.
மேலும், நமது மக்கள் நலனுக்காகவும் நமது கிரகத்தின் சிறந்த எதிர்காலத்திற்காகவும் நமது நாடுகள் நெருக்கமாகச் செயல்படும் என்றும் குறிப்பிட்டார்.
ட்ரம்ப் இரண்டாவது முறையாக வெள்ளை மாளிகைக்கு திரும்பிய பின்னர் இந்தியப் பிரதமர் மோடி மேற்கொள்ளும் முதல் அமெரிக்க விஜயம் இதுவாகும்.
அமெரிக்காவில் இருக்கும் போது, பிரதமர் மோடி, வெள்ளை மாளிகைக்கு வருகை தரும் உயர் அதிகாரிகளுக்காக நியமிக்கப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க விருந்தினர் மாளிகையான பிளேர் மாளிகையில் தங்குவார்.
“உலகின் மிகவும் பிரத்தியேக ஹோட்டல்” என்றும் அழைக்கப்படும் பிளேர் ஹவுஸ், கடந்த காலங்களில் ஜனாதிபதிகள், அரச குடும்பங்கள் மற்றும் உலகத் தலைவர்களை விருந்தளித்துள்ளது.
பெப்ரவரி 5 அன்று அமெரிக்காவால் சட்டவிரோதமாக குடியேறிய 104 இந்தியர்களை நாடு கடத்தியதன் பின்னணியில், பிரதமர் மோடியின் வருகை முன்னெப்போதையும் விட அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
கடந்த வெள்ளியன்று, அமெரிக்காவில் வசிக்கும் மேலும் 487 சட்டவிரோத இந்திய குடியேற்றவாசிகளை அமெரிக்க அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளதாகவும், அவர்கள் விரைவில் நாடு கடத்தப்பட உள்ளதாகவும் அரசாங்கம் அறிவித்தது.
இந்த பயணத்தின் போது, இந்தியப் பிரதமர் டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ் தலைவர் எலோன் மஸ்க்கையும் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எலோன் மஸ்க், ட்ரம்பின் அரசாங்க செயல்திறன் துறையின் (DOGE) தலைவராகவும் இருக்கிறார்.
ஸ்டார்லிங்கின் இந்திய சந்தையில் நுழைவது பிரதமர் மோடி மற்றும் மஸ்க் இடையேயான விவாதங்களில் இடம் பெற வாய்ப்புள்ளது.
ஸ்டார்லிங்க் என்பது எலோன் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ஸ்டார்லிங்க் சேவை மூலம் இயக்கப்படும் செயற்கைக்கோள் ஆகும்.
முன்னதாக புதன்கிழமை, பிரதமர் நரேந்திர மோடி தனது 3 நாள் பிரான்ஸ் பயணத்தை முடித்துக்கொண்டு அமெரிக்கா சென்றார்.
அங்கு அவர் சர்வதேச AI செயல் உச்சி மாநாட்டில், 14 ஆவது இந்தியா-பிரான்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி மன்றத்தில் கலந்து கொண்டார்.
மேலும், பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.