மினுவாங்கொடையில் நபர் ஒருவரை சுட்டுக் கொன்ற சம்பவம் மற்றும் கிராண்ட்பாஸ் பகுதியில் நபர் ஒருவரை சுட்டுக் கொன்ற சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் குழுவொன்றை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
07.02.2025 அன்று மினுவாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரினால் கலோலுவ பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பில் மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.
இதன்படி நேற்று (13) மினுவாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யாகொடமுல்ல மற்றும் தாகொன்ன பிரதேசத்தில் மேல்மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் 17 கிராம் 350 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 05 கையடக்க தொலைபேசிகளுடன் இக்குற்றத்திற்கு உதவிய மூன்று சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 24 மற்றும் 33 வயதுடைய யாகொடமுல்ல மற்றும் தாகொன்ன பிரதேசத்தை சேர்ந்தவர்கள்.
துப்பாக்கிச் சூடு நடத்த வந்த சந்தேகநபர்களுக்குத் தப்பிச் செல்ல உதவியமை, தங்குமிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தமை, சதித்திட்டம் தீட்டியமை, போலி இலக்கத் தகடுகளைப் பயன்படுத்தி குற்றச் செயலுக்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளின் சேஸி இலக்கத்தை மறைத்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த மூன்று சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர் ஒருவருக்கு ருவன்வெல்ல நீதிவான் நீதிமன்றினால் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேல்மாகாண வடக்கு குற்றப்பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, கொழும்பு, முகத்துவாரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பஞ்சானந்த மாவத்தை பகுதியில் வைத்து 13 கிராம் 420 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவரை கொழும்பு வடக்கு பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் கைது செய்து பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
நேற்று (13) கைது செய்யப்பட்ட சந்தேகநபர் எந்தலை, வத்தளை பகுதியைச் சேர்ந்த 21 வயதுடையவர்.
16.10.2024 அன்று கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதம்பிட்டிய மயானத்திற்கு அருகில் நபர் ஒருவரை சுட்டுக் கொன்ற குற்றத்தின் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் இந்த சந்தேக நபர் என சந்தேகிக்கப்படுகிறது.
சந்தேக நபர் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் மற்றும் போதைப்பொருள் வியாபாரியின் நெருங்கிய உறவினர் எனவும் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர் எனவும் தற்போதைய விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முகத்துவாரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.