கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இன்று (14) ஆரம்பமாகும் ஒருநாள் தொடரின் இரண்டாவதும் இறுதியுமான ஆட்டத்தில் இலங்கை அணியானது அவுஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.
இந்த ஆட்டமானது இன்று காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
முதல் ஆட்டத்தில் 49 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தியுள்ள இலங்கை அணியானது, இந்தப் போட்டியிலும் வெற்றி கொண்டு தொடரை 2-0 என ஒயிட்வாஷ் செய்யும் இலக்குடன் களமிறங்குகிறது.
முதல் ஒருநாள் போட்டியில் இலங்கையின் சுழல் துறை பிரகாசித்தது, மகேஷ் தீக்ஷனாவின் நான்கு விக்கெட்டுக்களை எடுத்து அவுஸ்திரேலியாவின் துடுப்பாட்ட தரவரிசையை சிதைத்தார்.
அணித் தலைவர் சரித் அசலங்காவின் சிறப்பான சதமும் துடுப்பாட்டத்தில் சரிவிலிருந்த இலங்கையை மீட்டெடுக்க உதவியது.
இந்த நிலையில், பதிலடி கொடுத்து தொடரை 1:1 என்ற நிலையில் சமப்படுத்தும் நோக்குடனும், வெற்றியுடன் 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் நுழையும் நோக்குடனும் அவுஸ்திரேலியா இன்று தொடங்கும் ஆட்டத்தில் களமிறங்கும்.