ஐ.பி.எல். தொடரின் 18-வது சீசன் அடுத்த மாதம் 21ம் திகதி தொடங்கும் என சில தினங்களுக்கு முன்னர் தகவல் வெளியாகியிருந்த நிலையில் தற்போது அது22ஆம் திகதி மாற்றப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன் ஆரம்ப விழா கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டர்ன் மைதானத்தில் நடைபெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் ஆரம்பப் போட்டியில் நடப்பு சம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதும் என தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து மார்ச் 23ஆம் திகதி ஐதராபாத்தில் நடைபெறும் 2வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி ராஜஸ்தான் ராயல்ஸை எதிர்கொள்ளும் என கூறப்படுகிறது. இந்த ஆட்டம் மாலை தொடங்கும் எனவும் கூறப்படுகிறது.
தொடரின் 2வது தகுதி சுற்று மற்றும் இறுதிப்போட்டி கொல்கத்தாவில் நடைபெறும் எனவும், முதலாவது தகுதி சுற்று மற்றும் வெளியேற்றுதல் சுற்று ஆட்டங்கள் ஐதராபாத்தில் நடைபெறும் எனவும் கூறப்படுகிறது.
மேலும் ஒளிபரப்பு நிறுவனங்களில் கோரிக்கையை ஏற்று ஐ.பி.எல் தொடர் அடுத்த மாதம் 22ஆம் திகதி தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
10 அணிகள் கலந்து கொள்ளும் இந்த தொடருக்கான வீரர்களின் மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்றது. இந்த ஏலத்தில் 577 வீரர்கள் பங்கேற்றனர். மொத்தத்தில் 62 வெளிநாட்டவர் உட்பட 182 வீரர்கள் 639.15 கோடி இந்திய ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.