காதலர் தினம் என்பது ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் 14ஆம் திகதி கொண்டாடப்படும் ஒரு சிறப்பு வாய்ந்த நாளாக பார்க்கப்படுகிறது. தொடக்கத்தில் மேற்கத்திய நாடுகளில் கொண்டாடப்பட்டு வந்த காதலர் தினம், தற்போது உலகெங்கிலும் குறிப்பிடத்தக்க ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த குறிப்பிட்ட நாளில், ஒருவர் தான் விரும்பும் மற்றொருவருக்கு ப்ரபோஸ் செய்கிறார்கள். உலகெங்கிலும் இது வழக்கமாகிவிட்டாலும், இதற்கு பின்னால் நாம் தெரிந்து கொள்ளாத ஓர் சுவாரஸ்யமான வரலாறு இருக்கிறது. அதைப்பற்றி இந்த கட்டுரையில் விரிவாக பார்ப்போம்.
அமெரிக்கா முழுவதும் மற்றும் உலகெங்கிலும் உள்ள பிற இடங்களில், செயிண்ட் வேலன்டைனின் (புனித வேலன்டைன்) பெயரால் அன்புக்குரியவர்களிடையே இனிப்புகள், பூக்கள் மற்றும் பரிசுகள் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன.
காதலர் தினத்திற்கு காரணமான, இந்த மர்மமான துறவி யார்? இந்த மரபுகள் எங்கிருந்து வந்தன? மற்றும் வசந்த காலத்தை வரவேற்ற பண்டைய ரோமானிய சடங்கான லூபர்காலியாவிலிருந்து, விக்டோரியன் இங்கிலாந்தின் கிரீட்டிங் கார்டு கொடுக்கும் பழக்கவழக்கங்கள் வரை காதலர் தினத்தின் அர்த்தம் மற்றும் வரலாறு மிகவும் பரந்து விரிந்திருக்கிறது.
புனித வேலன்டைனின் புராணக்கதை: காதலர் தினத்தின் வரலாறு மற்றும் அந்த தினத்தின் பெயரைக் குறிக்கும் துறவி புனித வேலன்டைனின் கதை மர்மத்தில் மறைக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி நீண்ட காலமாக காதல் மாதமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும், காதலர் தினம் கிறிஸ்தவ மற்றும் பண்டைய ரோமானிய பாரம்பரியத்தின் மிச்சத்தை கொண்டுள்ளது என்பதை நாம் அறிவோம். ஆனால், இந்த புனித வேலன்டைன் என்பது யார்? அவருக்கும், இந்த பண்டைய கால சடங்குக்கும் என்ன தொடர்பு இருக்கிறது? என்பது உங்களுக்கு தெரியுமா?
கத்தோலிக்க திருச்சபை வேலன்டைன் அல்லது வேலன்டினஸ் என்ற பெயரில் குறைந்தது மூன்று வெவ்வேறு புனிதர்களை அங்கீகரிக்கிறது. அவர்கள் அனைவரும் அனைத்தையும் துறந்த துறவிகள் ஆவர். ஒரு புராணக் கதையின்படி, வேலண்டைன் என்பவர் மூன்றாம் நூற்றாண்டில் ரோமில் பணியாற்றிய ஒரு பாதிரியார் என்று கூறப்படுகிறது.
மனைவி மற்றும் குடும்பங்களைக் கொண்டவர்களை விட தனிமையில் இருக்கும் சிங்கிள் பாய்ஸ் சிறந்த வீரர்களாக இருப்பார்கள் என்று அன்றைய பேரரசர் இரண்டாம் கிளாடியஸ் முடிவு செய்த நிலையில், வேலன்டைன் சட்டவிரோதமாக காதல் திருமணத்தை நடத்தி வைத்தார். அதாவது, அரசரின் ஆணையை மீறி, இளம் காதலர்களுக்கு வேலண்டைன் ரகசியமாக திருமணம் செய்து வைத்தார். ஒரு கட்டத்தில், வேலண்டைன் செய்து வைக்கும் ரகசிய திருமணங்கள் வெளிச்சத்திற்கு வந்ததால், கிளாடியஸ் அவரைக் தூக்கிலிட உத்தரவிட்டார் என்று கூறப்படுகிறது. இன்னும் சிலர், இந்த நாளின் உண்மையான பெயருக்கு காரணம் டெர்னியின் புனித வேலண்டைன் என்கிற பாதிரியார் என்று வலியுறுத்துகின்றனர். இவரும் இரண்டாம் கிளாடியஸால் ரோமுக்கு வெளியே தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டார் என்கிறார்கள்.
கிறிஸ்தவர்கள், கடுமையான ரோமானிய சிறைகளில் அனுபவித்த சித்ரவதையில் இருந்து தப்பிக்க உதவியதற்காக வேலண்டைன் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் வேறு சில கதைகள் தெரிவிக்கின்றன. மற்றொரு புராணக் கதைப்படி, சிறையில் அடைக்கப்பட்ட வேலண்டைன், தனது சிறைவாசத்தின்போது தன்னைச் சந்தித்த ஒரு இளம் பெண்ணை அல்லது அவரது சிறைச்சாலை அதிகாரியின் மகளை காதலித்தபோது, அவளுக்கு ஒரு காதல் வாழ்த்து அனுப்பியதாக கூறுகிறார்கள். அவர் இறப்பதற்கு முன், அந்த பெண்ணுக்கு கையொப்பமிடப்பட்ட ஒரு கடிதத்தை எழுதியதாகக் கூறப்படுகிறது.
எனினும், வாழ்த்து அனுப்பும் இந்த பழக்கம் இன்னும் வழக்கத்தில் உள்ளது. இவ்வாறாக, காதலர் தினத்தை குறிக்கும் பல கதைகள் தெளிவற்றதாக இருந்தாலும், இந்த கதைகள் அனைத்தும் அவரை ஒரு அனுதாபம் கொண்ட, வீரம் மிக்க மற்றும் காதல் மன்னனாக காட்டுகின்றன. பிற்காலத்தில், இந்த நற்பெயரின் காரணமாக இங்கிலாந்து மற்றும் பிரான்சில் மிகவும் பிரபலமான புனிதர்களில் ஒருவராக வேலண்டைன் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.
காதலர் தினத்தின் தோற்றம் – பிப்ரவரியில் ஒரு பேகன் விழா: சிலர் காதலர் தினம், பிப்ரவரி மாதத்தின் நடுப்பகுதியில் கொண்டாடப்படுகிறது என்று நம்புகிறார்கள். இந்த கொண்டாட்டம் அநேகமாக, கி.பி.270இல் நிகழ்ந்திருக்கலாம். மற்றவர்கள், லூபர்காலியாவின் பேகன் கொண்டாட்டத்தை கிறிஸ்தவமயமாக்கும் முயற்சியாக, பிப்ரவரி மாதத்தின் நடுப்பகுதியில் புனித காதலர் தினத்தை கொண்டாட கிறிஸ்தவ திருச்சபை முடிவு செய்திருக்கலாம் என்று கூறுகின்றனர்.
பிப்ரவரி மாதம் அல்லது பிப்ரவரி 15ஆம் திகதிகளில் கொண்டாடப்பட்ட லூபர்காலியா, விவசாயத்தின் ரோமானிய கடவுளான ஃபௌனஸுக்கும், ரோமானிய நிறுவனர்களான ரோமுலஸ் மற்றும் ரெமுஸுக்கும் அர்ப்பணிக்கப்பட்ட ஒரு கருவுறுதல் விழாவாகும்.
புராணத்தின் படி, இந்த நாளின் பிற்பகுதியில், நகரத்தில் உள்ள அனைத்து இளம் பெண்களும் தங்கள் பெயர்களை ஒரு பெரிய குடுவையில் எழுதிப் போடுவார்கள். இதையடுத்து, அந்த நகரத்தின் திருமணமாகாத நபர்கள், அதாவது பிரம்மச்சாரிகள் அந்த குடுவையில் இருந்து ஒரு பெயரைத் தேர்ந்தெடுத்து, அவர் தேர்ந்தெடுத்த பெண்ணுடன் ஜோடியாகி, பின்னர் திருமணம் செய்து கொள்வதாக அறியப்படுகிறது.
காதல் மற்றும் அன்பின் நாள் லூபர்காலியா, கிறிஸ்தவத்தின் ஆரம்ப எழுச்சியால் ஓரளவு தப்பிப் பிழைத்தது. ஆனால், 5 ஆம் நூற்றாண்டின் இறுதியில், போப் கெலாசியஸ் பிப்ரவரி 14ஐ புனித காதலர் தினமாக அறிவித்தபோது அது கிறிஸ்தவத்திற்கு எதிரானது, சட்டவிரோதமானது என்று கருதப்பட்டது. இருப்பினும், நீண்ட காலத்திற்குப் பிறகுதான் அந்த நாள் காதலுடன் தொடர்புடையதாக பார்க்கப்பட்டது.
இடைக்காலத்தில், பிப்ரவரி 14 பறவைகளின் இனச்சேர்க்கை பருவத்தின் தொடக்கமாக பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்தில் பொதுவாக நம்பப்பட்டது. இது காதலர் தினத்தை, காதலுக்கான ஒரு நாளாக இருக்க வேண்டும் என்ற கருத்து உருவாக முக்கிய காரணமானது. இடைக்காலத்திலேயே காதலர் தின வாழ்த்துக்கள் பிரபலமாக இருந்தாலும், எழுதப்பட்ட காதலர் தின வாழ்த்துக்கள் 1400ஆம் ஆண்டுக்குப் பிறகுதான் ஆரம்பமாகத் தொடங்கின என்பது குறிப்பிடத்தக்கது.