இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் கொழும்பில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தலைமை அலுவலகத்திற்கு இன்று (14) விஜயம் செய்தார்.
அவர் வருகையை அடுத்து, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவும் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்தார்.
சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவர் நிலையத்தின் (USAID) மூலம் நிதியளிக்கப்படும் அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு நாமல் ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ள பின்னணியில் தூதுவர் ஜூலி சுங்கின் விஜயம் இடம்பெற்றுள்ளது.
எவ்வாறெனினும், அமெரிக்க தூதுவர் ஜூலி சுங்குடனான இன்றைய சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்த நாமல் ராஜபக்ஷ,
அவர்கள் பரஸ்பர நலன் தொடர்பான கலந்துரையாடல்களில் ஈடுபட்டதாகவும், அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவை வலுப்படுத்துவதற்கு SLPP இன் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தியதாகவும் தெரிவித்தார்.
மேலும், அமெரிக்க வரி செலுத்துவோர் வளங்களை ஒதுக்கீடு செய்வதில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதை மையமாகக் கொண்டு, இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட மற்றும் பதிவுசெய்யப்படாத அரச சார்பற்ற நிறுவனங்கள் USAID நிதியைப் பயன்படுத்துவதை விசாரிக்கும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் SLPPயின் முன்மொழிவு குறித்து தூதுவர் சுங்கிற்கு அவர்கள் விளக்கினர்.
இரு நாடுகளின் பரஸ்பர நலனுக்காக புதிய அமெரிக்க நிர்வாகத்துடன் நெருக்கமாக ஒத்துழைக்க SLPP எதிர்நோக்குகிறது என்றும் நாமல் ராஜபக்ஷ கூறினார்.