“கிளீன் ஸ்ரீலங்கா” திட்டம் என்பது சுத்தம் செய்வதை மட்டும் குறிக்கும் ஒரு நிகழ்ச்சித் திட்டமன்று. அதற்குப் பின்னால் ஒரு பெரிய நோக்கம் உள்ளது. நமது சூழல் மட்டுமல்ல. நமது உள்ளத்தில் உள்ள அழுக்குகள் முதல் ஒரு பண்பாடான வாழ்க்கைக்கான தடைகளை அகற்றுவதும் இத்திட்டத்தின் ஒரு பகுதியாகும்.”
இவ்வாறு கூறியிருப்பவர் பிரதமர் ஹரினி.
கடந்த ஒன்பதாம் திகதி,காலை, மட்டக்குளி கடற்கரைப் பூங்காவில் இடம்பெற்ற “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் ‘அழகிய கடற்கரை கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலம்’ நிகழ்ச்சித்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
“உள்ளத்தில் உள்ள அழுக்குகளையும் ஒரு பண்பாடான வாழ்க்கைக்கான தடைகளையும் அகற்ற ” வேண்டும் என்று ஹரிணி கூறுகிறார். அப்படியென்றால் இலங்கைத் தீவின் நீண்டகால அழுக்கு எது? இனவாதம் தான். அதை அகற்ற வேண்டும். தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தால் அதைச் செய்ய முடியுமா ?
முடியும் என்று நம்பத்தக்கவிதமாக அரசாங்கத்தின் நடவடிக்கைகள் அமையவில்லை. கடைசியாக நடந்த மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் அனுரவின் முகபாவனையிலும் அது தெரியவில்லை.
அதைவிட முக்கியமாக நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக வடக்கிலும் கிழக்கிலும் பிரதான சாலைகளில் அமைந்திருந்த சில சோதனைச் சாவடிகளும் கேந்திர முக்கியத்துவம் மிக்க இடங்களுக்குள் நுழையும் வாசல் பகுதியில் அமைந்திருந்த சோதனைச் சாவடிகளும் அகற்றப்பட்டன. ஆனால் தேர்தல் முடிந்த பின் அவை மீண்டும் முளைத்து விட்டன. இந்த விடயம் கடந்த வாரம் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த ஐநா உயர் அதிகாரிகள் குழுவுக்குச் சுட்டிக்காட்டப்பட்டது.ராணுவ மயநீக்கம் என்பது எவ்வளவு கடினமானது என்பதனை விளங்கிக்கொள்ள இது உதவும்.
இப்படித்தான் இருக்கிறது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மாற்றங்கள்.இவ்வாறான ஏமாற்றகரமான ஒரு பின்னணியில்,தையிட்டி விகாரையில் கையை வைத்து அடுத்தடுத்த தேர்தல்களில் வெற்றி வாய்ப்புகளைக் குறைத்துக் கொள்ள அரசாங்கம் தயாராக இருக்குமா?
இலங்கைத் தீவின் இன யதார்த்தம் அதுதான். தமிழ்ப் பகுதிகளில் எதிர்ப்புக் கூடும் பொழுது அதைக்காட்டி சிங்கள பௌத்த வாக்குகளைத் திரட்டலாம்.தமிழ் எதிர்ப்பைத் தணிப்பதற்காகத் தமிழ் மக்களுக்கு விட்டுக் கொடுத்தால்,சிங்களபௌத்த வாக்குகளை இழக்க வேண்டியிருக்கும்.சில மாதங்களில் உள்ளூராட்சி சபைத் தேர்தலும் பின்னர் மாகாண சபைத் தேர்தலும் வைக்கப்பட வேண்டும்.எனவே இது ஒரு தேர்தல் ஆண்டு. இத்தேர்தல் ஆண்டில் சிங்கள பௌத்த வாக்காளர்களை இழப்பதா அல்லது தையிட்டியைக் கிளீன் பண்ணுவதா என்று அரசாங்கம் முடிவு எடுக்க வேண்டும்.
அந்த விகாரையை படையினரிடமிருந்து பொறுப்பெடுத்து புத்தசாசன அமைச்சு நிர்வகிக்கப் போவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன் படைப் பரிமாணத்தைக் குறைத்து சிவில் பரிமாணத்தைக் கூட்டுவதன்மூலம் தமிழ் மக்களின் எதிர்ப்பைத் தணிக்கலாம் என்று அரசாங்கம் எதிர்பார்க்கின்றது. அவ்வாறு நடந்தால் படைத்தரப்பு அந்த பகுதியில் இருந்து விலகி ஒதுங்கி நிற்கும் என்று எதிர்பார்க்கலாம்.ஆனால் புத்தசாசன அமைச்சையும் படைத்தரப்பையும் பிரித்துப்பார்க்க முடியாது.சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பின் வெவ்வேறு பகுதிகள் அவை.எனவே புத்த சாசன அமைச்சு அதனை நிர்வகித்தாலும் படையினரின் நிழலில்தான் அது தொடர்ந்து பாதுகாக்கப்படும்.
உதாரணமாக, தையட்டியில் இருந்து சுமார் 13 கிலோமீட்டர் தொலைவில் மாதகல் கடற்கரையில் சம்பில் துறைமுகம் காணப்படுகிறது. இது புராதன இலக்கியங்களில் குறிப்பிடப்படும் வரலாற்று முக்கியத்துவம் மிக்க ஒரு புராதன துறைமுகம் ஆகும். ஆனால் இப்பொழுது அந்தப் பகுதி முழுவதுமாக சிங்களபௌத்த மயப்படுத்தப்பட்டு விட்டது.அதற்குச் சிங்கள இலக்கியங்களில் கூறப்படும் ஜம்புகோளப் பட்டினம் என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. அப்பகுதி முழுவதும் சிங்கள பௌத்தக் கட்டுமானங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. யுத்த வெற்றிவாதத்தின் சுற்றுலாப் பயணிகளாக வரக்கூடிய சிங்கள மக்களைக் கவர்வதற்கு அங்கே ஒரு பெரிய விருந்தினர் விடுதி கட்டப்பட்டுள்ளது. சம்பில்துறை ஜம்பு கோளப் ப்பட்டினமாக மாறிவிட்டது.
அந்த ஆக்கிரமிப்பை எதிர்த்து அங்கு வாழும் இந்துக்கள் ஒரு பெரிய சிவன் சிலையை அங்கே நிறுவியிருக்கிறார்கள். ஆனால் அந்த பகுதிக்குப் போய் வந்தால் தெரியும், சிங்கள பௌத்த மயமாக்கப்பட்ட அந்தப் பகுதிக்குள் பரம சிவன் அனாதை போல நிற்கிறார்.
சம்பில்துறையைப் போலவே தையிட்டிக்கும் வரலாற்று முக்கியத்துவம் உண்டு.ஏற்கனவே அங்கு ஆதி பௌத்த விகாரை ஒன்று காணப்பட்டது என்று வரலாற்று அறிஞர்கள் கூறுகிறார்கள்.அதை வைத்து சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பானது அந்தப் பகுதியை சிங்கள பௌத்த மயப்படுத்தி வருகின்றது. அந்த ஆதி பௌத்த விகாரையானது அநேகமாக தமிழ் விகாரையாகவும் இருக்கலாம். ஆனால் இப்பொழுது தமிழர்கள் மத்தியில் பௌத்தம் பயிலப்படும் மதமாக இல்லை. எனவே அதைத் தமிழ் பௌத்த விகாரையாகக் கட்டியெழுப்ப வேண்டிய தேவை இல்லை.
அந்த ஆதி விகாரை இருந்த இடம் அப்படியே இருக்கிறது.இப்பொழுது கட்டப்படும் விகாரையானது ஒரு புதிய இடத்தில் கட்டப்படுகிறது. மிகக்குறிப்பாக அது ஒரு சிங்கள பௌத்த விகாரையாகத்தான் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதில் தமிழ் அடையாளம் கிடையாது.
அதைவிட முக்கியமாக, அது ஒரு தனியார் காணியில் கட்டப்பட்டுள்ளது.அந்தக் காணியின் உரிமையாளர் ஒரு ஓய்வு பெற்ற நில அளவையாளரான மலேசியன் பெஞ்சனியர் என்று கூறப்படுகிறது.அவருடைய பெண் வாரிசு ஒன்று மலேசியாவில் இருந்து வந்து அந்த விகாரைக் காணி தொடர்பாக ஒரு தமிழ் அரசியல்வாதியோடு உரையாடியதாகவும் தகவல் உண்டு.பின்னர் படைத்தரப்பினரை அவர் சந்தித்ததாகவும் ஒரு தகவல் உண்டு.அவர் ஒரு முதிய பெண் என்றும் இப்பொழுது எங்கே இருக்கிறார். இருக்கிறாரா இல்லையா போன்ற விவரங்களும் தெரியாது என்று மேற்சொன்ன அரசியல்வாதி எனக்குச் சொன்னார்.
இப்பொழுது பிரச்சினை அந்தக் காணி தனியாருடையதா அரசாங்கத்துடையதா என்பது அல்ல.அது யாருடையதாகவும் இருக்கட்டும். அங்கே கட்டப்பட்ட விகாரை தமிழ் மக்களுக்காக கட்டப்படவில்லை என்பது மட்டும் உண்மை. அது சிங்கள பௌத்த மயமாக்கலின் ஒரு பகுதியாகத்தான் அங்கே கட்டப்பட்டுள்ளது என்பதுதான் இங்குள்ள பிரச்சினை.
தமிழ்ப் பகுதிகளில் சிங்கள வியாபாரிகளும் முதலீட்டாளர்களும் காணிகளை விலை கொடுத்து வாங்குகிறார்கள். குறிப்பாக சில இடங்களில் போலீஸ் நிலையம் அமைப்பதற்கு போலீஸ் திணைக்களம் அவ்வாறு தமிழ் மக்களிடம் காணிகளை வாங்கியிருப்பதாகக் கூறப்படுகின்கிறது. எனவே அரசாங்கம் காணியை வாங்குவது இங்கு பிரச்சினை அல்ல. அரசாங்க கட்டுமானங்கள் அமைக்கப்படும் காணியின் உரிமையாளர் யார் என்பதும் இங்கு பிரச்சனை அல்ல. அதாவது இதை வெறும் சட்டப் பிரச்சினையாக மட்டும் கருத முடியாது. மாறாக இங்கே பிரச்சனை அந்த விகாரை எதற்காகக் கட்டப்படுகிறது என்பது தான்.
சந்தேகத்துக்கிடமின்றி அது தமிழ் மக்களுக்காக கட்டப்படவில்லை.அது 2009க்கு பின்னரான சிங்கள பௌத்த மயமாக்கலின் ஒரு பகுதியாகத்தான் கட்டப்படுகிறது. தையிட்டிலிருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சம்பில் துறைமுகத்தை எப்படி சிங்களமயப்படுத்தியிருக்கிறார்களோ அப்படித்தான் இதுவும்.
இரண்டுமே 2009க்கு பின்னர் கட்டப்பட்டவை.எனவே இங்கு தமிழ் மக்கள் எதிர்க்க வேண்டிய விடயம் அது சிங்கள பௌத்த மயமாக்கலின் ஒரு குறியீடு என்பதுதான்.எனவே பிரச்சனையை அந்தக் கோணத்தில் இருந்துதான் அணுக வேண்டும். அந்தக் கோணத்தில் இருந்துதான் தீர்க்கவும் வேண்டும்.
அதை ஒரு சட்டப் பிரச்சினையாக அணுகி சட்டத் தீர்வை எதிர்பார்ப்பது என்பது இலங்கைத் தீவின் சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பின் ஒரு பகுதியாக உள்ள சட்டத்தை தமிழ் மக்கள் நம்புகிறார்கள், எதிர்பார்ப்போடு பார்க்கிறார்கள் என்று பொருள்படும். இல்லை. நாட்டின் சட்டம் எப்பொழுதும் தமிழ் மக்களுக்கு எதிராக வளைக்கப்படும் என்பதற்கு குறுந்தூர் மலை, வெடுக்கு நாரிமலை கிழக்கில் மேய்ச்சல் தரை போன்ற உதாரணங்கள் உண்டு. பயங்கரவாத தடைச் சட்டத்தைத் தன்னுள் கொண்டிருக்கும் இலங்கைத்தீவின் சட்டக் கட்டமைப்பானது தமிழ் மக்களுக்கு எதிராக எப்பொழுதும் வளைக்கப்படுவதுண்டு. அதே சட்டக்கட்டமைப்பிடம் தையட்டி விவகாரத்தில் தீர்வை எதிர்பார்க்கலாமா?
எனவே இக்கட்டுரையின் தொடக்கத்தில் பிரதமர் ஹரிணி கூறுவதன் அடிப்படையில்,கிளீன் சிறீலங்காவை தையிட்டியில் இருந்து தொடங்கலாமே?