சட்டவிரோதமாக தங்கியிருந்ததற்காக அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட 112 இந்தியர்களைக் கொண்ட மூன்றாவது குழுவை ஏற்றிச் சென்ற அமெரிக்க இரணுவ விமானம் ஞாயிற்றுக்கிழமை (16) இரவு அமிர்தசரஸில் தரையிறங்கியது.
அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான C-17 Globemaster விமானம் ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணியளவில் அமிர்தசரஸ் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகத்தின் சட்டவிரோதக் குடியேற்றவாசிகளுக்கு எதிரான நடவடிக்கையின் ஒரு பகுதியாக கடந்த 10 நாட்களில் இதுபோன்ற மூன்றாவது வருகை இதுவாகும்.
நாடு கடத்தப்பட்ட 112 பேரில் 44 பேர் ஹரியானா, 33 பேர் குஜராத், 31 பேர் பஞ்சாப், 2 பேர் உத்தரபிரதேசம் மற்றும் தலா ஒருவர் உத்தரகாண்ட் மற்றும் இமாச்சல பிரதேசத்தை சேர்ந்தவர்கள்.
சட்டவிரோதமாக குடியேறிய சிலரின் குடும்பத்தினர் அவர்களை வரவேற்பதற்காக அமிர்தசரஸில் உள்ள ஸ்ரீ குரு ராம் தாஸ் ஜீ சர்வதேச விமான நிலையத்திற்கு இதன்போது வருகை தந்திருந்தனர்.
குடியேற்றம், சரிபார்ப்பு மற்றும் பின்னணி சோதனைகள் உட்பட அனைத்து சட்ட நடவடிக்கைகளும் முடித்த பின்னர், நாடு கடத்தப்பட்டவர்களை அவர்களுக்கு சொந்த இடங்களுக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருந்தது.
சனிக்கிழமை இரவு, 116 சட்டவிரோத இந்தியக் குடியேற்றவாசிகளை ஏற்றிச் சென்ற இரண்டாவது அமெரிக்க இராணுவ விமானம், அமிர்தசரஸ் விமான நிலையத்தில் தரையிறங்கியது
இந்த 116 நாடுகடத்தப்பட்டவர்களில், 65 பேர் பஞ்சாப்பைச் சேர்ந்தவர்கள், 33 பேர் ஹரியானாவைச் சேர்ந்தவர்கள், 8 பேர் குஜராத்தைச் சேர்ந்தவர்கள், தலா 2 பேர் உத்தரப் பிரதேசம், கோவா, மகாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தானைச் சேர்ந்தவர்கள்.
மேலும் இமாச்சலப் பிரதேசம் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் இருந்து தலா ஒருவரும் அடங்குவர்.
மூன்று விமானங்களிலும் இதுவரை மொத்தம் 332 சட்டவிரோத இந்திய குடியேறிகளை அமெரிக்கா நாடு கடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.