கொழும்பு, புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் இன்று (19) காலை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான பாதாள உலக தலைவர் கணேமுல்ல சஞ்சீவ சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
வழக்கு ஒன்றின் விசாரணைக்காக இன்று அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்தும் நடவடிக்கையின் போது, சட்டத்தரணி போல் வேடமணிந்து வந்த நபரினால் இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.
சட்டத்தரணிகளின் மேசையில் அமர்ந்திருந்த சந்தேக நபர் கணேமுல்ல சஞ்சீவ மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை கைது செய்வதற்கான விசேட நடவடிக்கையை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த கணேமுல்ல சஞ்சீவ, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
இந்த நிலையில், நாட்டிலேயே மிகவும் பலத்த பாதுகாப்புடன் இருக்கும் நீதிமன்ற வளாகங்களில் ஒன்றான நீதிமன்ற வளாகத்தில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து இந்த சம்பவம் கடுமையான கவலைகளை எழுப்பியுள்ளது.
நேபாளத்திலிருந்து 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 13 ஆம் திகதி நாடு திரும்பியதும் கட்டுநாயக்க கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) பாதாள உலக நபர் கைது செய்யப்பட்டார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் கொழும்பு வடக்கு குற்றப் பிரிவினரால் பெறப்பட்ட தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் வீரகுள பொலிஸ் நிலையத்தில் அவர் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
கம்பஹா நீதிவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் பின்னர் கடந்த வருடம் ஜூன் மாதம் பூஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.