ஒப்பந்தக் கடமைகளை மீறிய குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் கிரிக்கெட் அணித்தலைவர் தசுன் ஷானக்கவுக்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் (SLC) 10,000 அமெரிக்க டொலர் அபராதம் விதித்துள்ளது.
2025 பெப்ரவரி 02 ஆம் திகதி நடைபெற்ற உள்நாட்டுப் போட்டியின் போது ஏற்பட்ட காயத்தை காரணம் காட்டி தசுன் ஷானக மூன்று நாட்கள் விடுப்பு கோரியதாகவும், ஆனால் அந்த காலப்பகுதியில் டுபாயில் நடைபெற்ற வெளிநாட்டு உரிமையியல் லீக் போட்டியில் பங்குபற்றியதாகவும் SLC தெரிவித்துள்ளது.
துடுப்பாட்ட வீரரின் எழுத்துப்பூர்வ பதிலையும் மன்னிப்பையும் கருத்தில் கொண்டதாகக் கூறிய SLC, எவ்வாறெனினும் தசுன் ஷனக்கவின் நடவடிக்கைகள் ஒப்பந்தக் கடமைகளை மீறுவதாக செயற்குழு தீர்மானித்ததாக கூறியது.
அந்தவகையில் ஒழுக்காற்று நடவடிக்கையாக தசுன் ஷானக்கவுக்கு 10,000 அமெரிக்க டொலர்கள் அபராதம் விதிக்க செயற்குழு முடிவு செய்ததாக SLC தெரிவித்துள்ளது.
2025 பெப்ரவரி 28 அல்லது அதற்கு முன்னர் அபராதத்தை செலுத்துமாறும் அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கு இணங்கத் தவறினால் மேலதிக ஒழுக்காற்று நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் எனவும் தசுன் ஷானக்கவிற்கு SLC எச்சரிக்கை விடுத்துள்ளது.
இலங்கையின் முன்னாள் தலைவர் தசுன் ஷானக்க கடந்த பெப்ரவரி மாதம் இலங்கையில் விளையாடியபோது கழுத்தில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.