ஒழுங்கமைக்கப்பட்ட பாதாள உலகக் குழு உறுப்பினர் கணேமுல்ல சஞ்சீவ படுகொலையுடன் தொடர்புடைய மேலும் மூன்று சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கைதுகளுடன் குறித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களில் மொத்த எண்ணிக்கையானது 08 ஆக அதிகரித்துள்ளது.
நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட மூவரும் கம்பஹா மற்றும் உடுகம்பொல பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்படி, கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை தம்வசம் வைத்திருந்தமை, குற்றம் நடந்த தினத்திற்கு முந்தைய நாள் துப்பாக்கிச் சூடு நடத்திய நபருக்கு துப்பாக்கியை வழங்கியமை போன்ற குற்றச்சாட்டில் 22 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் அஸ்கிரிய, கம்பஹா மல்வத்தை வீதியைச் சேர்ந்த தமிது லக்ஷான் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அதேநேரம், படுகொலை சம்பவத்தின் பின்னர் துப்பாக்கிச் சூடு நடத்திய நபரையும் மற்றைய சந்தேக நபரையும் முச்சக்கர வண்டியில் ஏற்றிச் சென்றதற்காகவும், குற்றச் செயல்களுக்கு உதவிய குற்றத்திற்காகவும் 25 வயதுடைய தமித் அஞ்சன நயனஜித் என்ற இளைஞனும், அஸ்கிரியவல்பொல, உடுகம்பொல பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞனும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸாரும், குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் மேற்கொண்டு வருகின்றனர்.