முன்னதாக சனிக்கிழமையன்று “நீண்ட ஆஸ்துமா போன்ற சுவாச நெருக்கடியால்” பாதிக்கப்பட்ட புனித போப் பிரான்சிஸின் உடல்நிலையானது தொடர்ந்தும் “மோசமாக” இருப்பதாக வத்திக்கான் தெரிவித்துள்ளது.
பல நாட்களாக சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டதால், கடந்த 14 ஆம் திகதி கத்தோலிக்க பேரவையின் தலைவர் போப் பிரான்ஸிஸ் ரோமின் ஜெமெல்லி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் அவருக்கு இரு நுரையீரல்களிலும் நிமோனியா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
இந்த நிலையில் சனிக்கிழமை (22) மாலை வத்திக்கான் ஒரு அறிக்கையில், 88 வயதான பிரான்சிஸ் காலை வேளையில் “நீண்ட நேர ஆஸ்துமா போன்ற சுவாச நெருக்கடியை” எதிர்கொண்டாகவும், அதற்கு “அதிக ஓட்ட ஆக்ஸிஜனை” நிர்வகிக்க வேண்டியிருந்ததாகவும் கூறியது.
மேலும், பரிசுத்த பாப்பரசரின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதுடன், அவர் இன்னும் ஆபத்திலிருந்து மீளவில்லை.
அதேநேரம், “புனிதத் தந்தை விழிப்புடன் இருக்கிறார், நேற்றைய தினத்தை விட அவர் அதிகமாக அவதிப்பட்டாலும், ஒரு நாற்காலியில் இன்றைய நாளைக் கழித்தார். தற்போது அவரது உடல் நிலை தொடர்பான பாதுகாப்பு கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கூடுதல் ஆக்ஸிஜனைத் தவிர, அவருக்கு இரத்த மாற்றமும் மேற்கொள்ளப்பட்டதாக வத்திக்கான் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியது.
2013 ஆம் ஆண்டு முதல் போப்பாக இருக்கும் பிரான்சிஸ், கடந்த இரண்டு ஆண்டுகளில் உடல்நலக்குறைவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு இளம் வயதிலேயே நுரையீரல் ஒவ்வாமை ஏற்பட்டு, ஒரு நுரையீரலின் ஒரு பகுதி அகற்றப்பட்டதால், அவர் நுரையீரல் தொற்றுக்கு ஆளாக நேரிடும் வாய்ப்பு அதிகம் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.