தெலுங்கானாவில் கட்டுமானப் பணியில் இருந்த சுரங்கப்பாதையின் ஒரு பகுதி சனிக்கிழமை (22) இடிந்து விழுந்ததில் குறைந்தது எட்டு தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டுள்ளனர்.
தெலுங்கானாவின் ஸ்ரீசைலம் அணைக்கு பின்புறம் உள்ள சுரங்கப்பாதையின் ஒரு பகுதியில் கசிவை சரிசெய்ய சில தொழிலாளர்கள் உள்ளே சென்றபோது இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.
விபத்தினை அடுத்து சுரங்கத்தில் சிக்கி பல தொழிலாளர்கள் பாதுகாப்பாக வெளியேறினர்.
எனினும், எட்டு தொழிலாளர்கள் இன்னும் சுரங்கத்தில் சுக்கியுள்ளதாகவும், அவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF) மீட்புப் படை தெரிவித்துள்ளன.
சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களில் 4 பேர் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், இருவர் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள், ஒருவர் ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்தவர் மற்றும் ஒருவர் பஞ்சாப்பைச் சேர்ந்தவர்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மீட்பு நடவடிக்கைகளுக்காக இந்திய இராணுவம் தனது பொறியாளர் பணிக்குழுவையும் (ETF) விரைவாக பணியமர்த்தியுள்ளது.
நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய, இராணுவ பொறியாளர் பணிக்குழுவானது விபத்து நடந்த இடத்தில் மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரண (HADR) நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.