ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து பாகிஸ்தான் முன்கூட்டியே வெளியேறும் நிலையினை எதிர்கொண்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை (23) துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடந்த குழு ஏ மோதலில் மொஹமட் ரிஸ்வானின் தலைமையிலான அணி, ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியாவிடம் ஆறு விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது.
இந்த தோல்வியின் மூலம், பாகிஸ்தான் குழு ஏ அட்டவணையின் கடைசி இடத்தில் உள்ளது.
கராச்சி தேசிய மைதானத்தில் பெப்ரவரி 19 அன்று நடந்த முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் ஏற்கனவே நியூசிலாந்திடம் 60 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இந்த சரிவுடன் இந்தியாவுக்கு எதிராக நேற்றைய ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவர்கள் 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 241 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தனர்.
அணி சார்பில் அதிகபட்சமாக சவுத் ஷகீல் 62 ஓட்டங்களையும், அணித் தலைவர் மொஹமட் ரிஸ்வான் 46 ஓட்டங்களையும் அதிகபடியாக எடுத்தனர்.
இலக்கை துரத்திய இந்திய அணியானது 6 விக்கெட்டுகள் மற்றும் 45 பந்துகள் மீதமிருந்த நிலையில் விராட் கோலியின் 51 ஆவது ஒருநாள் சதத்துடன் தொடரில் இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது.
சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பு பாகிஸ்தானின் கைகளில் இல்லை.
பெப்ரவரி 27 அன்று பங்களாதேஷுக்கு எதிரான இறுதிப் போட்டியில் அவர்கள் வெற்றி பெற வேண்டும்.
அதேநேரம், ராவல்பிண்டியில் பங்களாதேஷ் மற்றும் நியூசிலாந்து இடையே திங்கள்கிழமை நடைபெறும் மோதலில் அவர்களின் கவனம் இருக்கும்.
நியூஸிலாந்து அணி, நஜ்முல் ஹொசைன் தலைமையிலான அணியை தோற்கடித்தால், பாகிஸ்தான் அதிகாரப்பூர்வமாக வெளியேற்றப்படும்.
அவ்வாறு எனின், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.
பங்களாதேஷும் பாகிஸ்தானுடன் இணைந்து வெளியேறும்.
எனினும், பெப்ரவரி 24 அன்று பங்களாதேஷ் நியூசிலாந்தை தோற்கடித்து, பெப்ரவரி 27 அன்று பாகிஸ்தான் பங்களாதேஷை தோற்கடித்தால், பாகிஸ்தான் சாம்பியன் டிராபிக்கான கனவினை உயிர்ப்புடன் வைத்திருக்க மார்ச் 2 அன்று நடைபெறும் ஆட்டத்தில் நியூஸிலாந்தை இந்தியா வீழ்த்த வேண்டும்.
அந்த ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றால், நியூசிலாந்து, பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் ஆகிய மூன்று அணிகள் அட்டவணைியில் இரண்டு புள்ளிகளுடன் குழு நிலை ஆட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும்.
அந்த சூழ்நிலையில், சிறந்த நெட் ரன் ரேட் கொண்ட அணி, குழு ஏ இலிருந்து அரையிறுதியில் இந்தியாவுடன் இணையும்.
பாகிஸ்தான் தகுதி பெற அவர்களுக்கு தேவையான போட்டி முடிவுகள் இதோ:
பெப்ரவரி 24: ராவல்பிண்டியில் பங்களாதேஷ் நியூசிலாந்தை வீழ்த்த வேண்டும்.
பெப்ரவரி 27: ராவல்பிண்டியில் பங்களாதேஷை பாகிஸ்தான் வீழ்த்த வேண்டும்.
மார்ச் 02: துபாயில் நியூஸிலாந்த இந்தியா வீழ்த்த வேண்டும்.