சிலி முழுவதுமான பாரிய மின்வெட்டு செவ்வாயன்று (25) நாட்டின் தலைநகரான சாண்டியாகோவை இருளில் மூழ்கடித்தது.
அதேநேரம் அது சிலியின் வடக்கில் உள்ள முக்கிய தாமிரச் சுரங்கங்க பணிகளையும் கடுமையாக பாதிப்படையச் செய்தது.
இது உலகளாவிய உலோகச் சந்தைகளை பாதித்தது.
மின் வெட்டு தொடங்கி இருள் சூழ்ந்த சில மணி நேரங்களுக்குப் பின்னர், சிலியின் அரசாங்கம் அவசரகால நிலையை அறிவித்தது.
அதேநேரம், இரவு 10.00 மணி முதல் மறுநாள் காலை 06.00 மணி வரை வரை (0100 முதல் 0900 GMT வரை) அரிகாவின் வடக்குப் பகுதியிலிருந்து லாஸ் லாகோஸின் தெற்குப் பகுதி வரை ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது.
உலகின் மிகப்பெரிய உலோக உற்பத்தியாளரான வடக்கு சிலியில் பெரிய செப்புச் சுரங்கங்கள் செயல்படு மின் வெட்டினால் பாதிக்கப்பட்டமையினால், உலகளாவிய உலோகச் சந்தைகளுக்கு அதிர்ச்சிகள் ஏற்பட்டன.
உலகின் மிகப்பெரிய தாமிரச் சுரங்கமான எஸ்கோண்டிடா, மின்சாரம் இல்லாமல் இருந்தது.
அதே நேரத்தில் அரசுக்கு சொந்தமான செப்பு சுரங்கமான கோடெல்கோ அதன் அனைத்து சுரங்கங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறியது.
நாட்டின் வடக்கில் மின் பறிமாற்றி வலையமைப்பு செயலிழந்ததால் பரவலான மின்தடை ஏற்பட்டது என்று சிலியின் உள்துறை அமைச்சர் கரோலினா தோஹா கூறினார்,
அதேநேரம், மின் தடைக்கு சைபர் தாக்குதல் காரணம் என முன்வைக்கப்பட்ட கூற்றினையும் அவர் நிராகரித்தார்.
எவ்வாறெனினும், சிலியின் பல ஆண்டுகளில் மிகப்பெரிய மின்வெட்டு தலைநகரின் இயல்பு நிலையை சீர்குலைத்தது.
அவசரகால வாகனங்களின் சைரன்கள் நகரம் முழுவதும் ஒலித்தன, மில்லியன் கணக்கான பயணிகளை ஏற்றிச் செல்லும் சாண்டியாகோ மெட்ரோ ரயில் நிலையம் மூடப்பட்டது, நிறுத்தப்பட்ட ரயில்களில் இருந்து பயணிகள் வெளியேற்றப்பட்டனர்.
சட்ட ஒழுங்கை பராமரிக்க உதவுவதற்காக நாடு முழுவதும் ஆயுதப்படைகளை நிறுத்தவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது.
செவ்வாய் இரவு 10 மணி நிலவரப்படி, தேசிய மின் கட்டத்தின் தேவையில் நான்கில் ஒரு பகுதி வழமைக்குத் திரும்பியது.
மேலும், புதன்கிழமை (26) காலைக்குள் மின்சாரத்தை முழுமையாக மீட்டெடுக்க முடியும் என்று சிலியின் தேசிய மின்சார ஒருங்கிணைப்பாளர் (CEN) வாரியத் தலைவர் ஜுவான் கார்லோஸ் ஓல்மெடோ கூறினார்.