ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம், வெளிநாட்டு உதவி நிதியை ஒப்பந்ததாரர்களுக்கும் மானியம் பெறுபவர்களுக்கும் செலுத்த வேண்டும் என்ற கூட்டாட்சி நீதிபதியின் உத்தரவை இடைநிறுத்தும் அறிவிப்பை அமெரிக்க உயர் நீதிமன்றின் தலைமை நீதிபதி ஜோன் ராபர்ட்ஸ் புதன்கிழமை (26) வெளியிட்டார்.
புதன்கிழமை இரவு 11:59 வரை காலக்கெடு விதித்த வொஷிங்டனை தளமாகக் கொண்ட அமெரிக்க மாவட்ட நீதிபதி அமீர் அலியின் உத்தரவை நிறுத்தி வைத்து ராபர்ட்ஸ் இடைக்கால உத்தரவை பிறப்பித்தார்.
நிர்வாகத் தடை என அழைக்கப்படும் இந்த உத்தரவுக்கு ராபர்ட்ஸ் எந்த காரணத்தையும் வழங்கவில்லை.
இது அமீர் அலியின் தீர்ப்பைத் தடுக்க நிர்வாகத்தின் முறையான கோரிக்கையை பரிசீலிக்க நீதிமன்றத்திற்கு மேலதிக நேரத்தை வழங்கும்.
அலியின் நீதிமன்ற உத்தரவு காலக்கெடுவை பூர்த்தி செய்ய முடியாது என்று கூறி, பெரும்பாலான அமெரிக்க வெளிநாட்டு உதவி ஒப்பந்தங்கள் மற்றும் மானியங்களை நிறுத்துவதற்கான இறுதி முடிவுகளை எடுத்துள்ளதாக ட்ரம்பின் நிர்வாகம் புதன்கிழமை (26) நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததை அடுத்து இந்த உத்தரவு வந்தது.
சர்வதேச வளர்ச்சிக்கான அமெரிக்க முகவர் நிலையத்தின் (USAID) வெளிநாட்டு உதவி ஒப்பந்தங்களில் 90%க்கும் அதிகமான தொகையையும், உலகம் முழுவதும் ஒட்டுமொத்தமாக 58 பில்லியனுக்கும் அதிகமான அமெரிக்க உதவிகளையும் நிர்வாகம் குறைத்து வருகிறது.
இது ட்ரம்பின் “அமெரிக்கா முதல் நிகழ்ச்சி நிரலின்” ஒரு பகுதி என்று வெளியுறவுத் துறையின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.