ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும், இராணுவ மற்றும் கடற்படை உயராதிகாரிகளுக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை தொடர்பாகவே குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவ உயர் அதிகாரிகளுடனான இக் கலந்துரையாடலின் போது, நாட்டின் பாதுகாப்பு நிலைமை தொடர்பான எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஆராயப்பட்டது.
மேலும் பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ மற்றும் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதேநேரம், நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை தொடர்பாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் கடற்படையின் உயர் அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்றும் நேற்று பிற்பகல் நடைபெற்றிருந்தது.
இந்தச் சந்திப்பில் இலங்கையின் பாதுகாப்பு நிலைமை தொடர்பிலான எதிர்கால நடவடிக்கைகள் குறித்து விசேடமாக கவனம் செலுத்தப்பட்டது.
ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில். தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த கடல் பரப்பில் மேற்கொள்ளப்படும் முன்னெடுப்புகள், கடல் மார்க்கமாக நடைபெறும் ஆயுத விற்பனை மற்றும் போதைப்பொருள் விற்பனை சுற்றிவளைப்பு உள்ளிட்ட ஆழ்கடலில் மேற்கொள்ளப்படும் கண்காணிப்பு முன்னெடுப்புக்கள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.
பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா, கடற்படை தளபதி வயிஸ் அட்மிரல் கஞ்சன பானகொட உள்ளிட்டவர்களும் கடற்படையின் உயர் அதிகாரிகள் பலரும் இதில் கலந்துகொண்டிருந்தனர்.