2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் திகதி மாத்தறை வெலிகம பகுதியில் நடந்த சம்பவம் தொடர்பாக தேசபந்து தென்னகோனுக்கு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அப்போதைய பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் உட்பட 8 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதேவேளை 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் திகதி அன்று, மாத்தறை வெலிகம பகுதியில் உள்ள ஹோட்டல் மீது வெள்ளை வேனில் வந்த ஒரு குழு துப்பாக்கிச் சூடு நடத்தியதுடன், அது தொடர்பில் கிடைத்த தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு வெலிகம பொலிஸ் ரோந்து வாகனத்தில் சென்ற பொலிஸ் அதிகாரிகள் குழு, வேனின் திசை நோக்கி பதில் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
வேனிலிருந்து குறித்த ஹோட்டல் நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியது கொழும்பு குற்றவியல் பிரிவை சேர்ந்த அதிகாரிகள் குழு என்பதுடன், வெலிகம பொலிஸார் நடத்திய எதிர் தாக்குதலில் வேனில் இருந்த கொழும்பு குற்றவியல் பிரிவை சேர்ந்த இரண்டு அதிகாரிகள் காயமடைந்தனர்.
காயமடைந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகளும் கராபிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு பொலிஸ் சார்ஜன்ட் உபுல் குமார உயிரிழந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.