தமிழில் ‘ஐயா’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை நயன்தாரா, தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் 80-க்கும் மேற்பட்ட திரைப் படங்களில் நடித்துள்ளார். மேலும் ‘ஜவான்’ திரைப் படத்தின் மூலம் பொலிவூட் ரசிகர்களையும் தன் வசப்படுத்தியிருந்தார்.
அதுமட்டுமல்லாது, இந்திய திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராகவும் நயன்தாரா காணப்படுகின்றார். தனது நடிப்புத்திறமைக்காக சிறந்த நடிகைக்கான பிலிம்ஃபேர் விருது, நந்தி விருது என பல்வேறு விருதுகளையும் அவர் வென்று குவித்துள்ளார்.
இந்நிலையில் நயன்தாரா அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அறிக்கையொன்றை நேற்றைய தினம் வெளியிட்டிருந்தார்.
குறித்த அறிக்கையில் தன்னை ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைக்க வேண்டாம் என தனது ரசிகர்களிடம் கோரிக்கை விடுத்த அவர், தனது வெற்றியின் போது ரசிகர்கள் தனது தோளைத் தட்டி பாராட்டியதோடு, கடினமான தருணங்களில் தன்னை தூக்கி நிறுத்தவும் உதவியமைக்கு நன்றி தெரிவித்தார்.
அத்துடன், ரசிகர்கள் பலரும் தன்னை ‘லேடி சூப்பர்ஸ்டார்’ என்று அன்புடன் அழைத்து வந்துள்ளனர் எனவும், அவர்களது பேராதரவால் உருவான இந்தப் பட்டத்திற்கு தான் மிகவும் கடமைப்பட்டிருப்பதாகவும், ஆனால் இனிமேல் தன்னை ‘நயன்தாரா’ என்று அழைக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் பட்டங்களும் விருதுகளும் மதிப்புமிக்கவையாக இருந்தாலும் சில சமயங்களில் அவை தம்மை தம் வேலையிலிருந்தும்,கலைத்தொழிலிலிருந்தும் ரசிகர்களின் அன்பான தொடர்பிலிருந்தும் பிரிக்கக்கூடும் என்பதால் அத்தகைய பட்டங்கள் தனக்கு வேண்டாம் எனவும் நயன்தாரா குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் எதிர்காலம் எதை கொண்டு வந்தாலும், ரசிகர்களின் ஆதரவு என்றும் மாறாது என்பதில் தான் பெருமகிழ்ச்சி அடைவதாகவும், ரசிகர்கள் அனைவரையும் மகிழ்விக்க தான் கடின உழைப்புடன் தொடர்ந்தும் செயற்படுவதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.