25 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல் முறையாக வெள்ளை பந்து கிரிக்கெட்டில் ஒரு பெரிய ஆட்டத்தின் இறுதிப் போட்டியில் இந்தியாவும் நியூசிலாந்தும் மோத உள்ளன.
லாகூரில் புதன்கிழமை (05) நடந்த இரண்டாவது அரையிறுதியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆதிக்க ஆட்டத்துடன் நியூசிலாந்து 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியின் இறுதிப் போட்டிக்கு தங்கள் இடத்தைப் பிடித்தது.
அதனால், எதிரவரும் ஞாயிற்றுக்கிழமை (09) துபாயில் நடைபெறும் இறுதிப் போட்டியில் மிட்செல் சான்ட்னர் தலைமையிலான அணி, பழக்கமான போட்டியாளர்களான இந்தியாவை எதிர்கொள்ளும்.
செவ்வாய்க்கிழமை (04) துபாயில் அவுஸ்திரேலியாவை நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் அணியாக இந்தியா மாறியது.
இந்தியாவுக்கு எதிரான கடைசி குழு ஏ போட்டியில் தோல்வியடைந்த நியூசிலாந்து, துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ரோஹித் சர்மா மற்றும் அவரது வீரர்களை எதிர்கொள்ளும் போது அந்த தோல்விக்குப் பழிவாங்கும் வாய்ப்பைப் பெறும்.
ஐசிசி ஆட்டங்களின் இறுதிப் போட்டிகளில் இந்தியாவும் நியூசிலாந்தும் இதற்கு முன்பு இரண்டு முறை மோதியுள்ளன.
கடைசியாக அவர்கள் ஒரு பெரிய போட்டியில் மோதியது 2021 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆகும்.
சவுத்தாம்ப்டனில் ஆறு நாட்கள் நீடித்த மழையால் பாதிக்கப்பட்ட போட்டியில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து இந்தியாவை எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
சுவாரஸ்யமாக, இந்த இரு அணிகளும் கடைசியாக வெள்ளை பந்து போட்டியின் இறுதிப் போட்டியில் விளையாடியது 2000 ஆம் ஆண்டு நைரோபியில் நடந்த ஐசிசி நாக் அவுட் டிராபியில் தான்.
அந்த சந்தர்ப்பத்தில், நியூசிலாந்து இந்தியாவை நான்கு விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து முதல் ஐசிசி பட்டத்தை வென்றது.
அதன் பிறகு, நியூசிலாந்து ஆண்கள் அணியினர் கிரிக்கெட்டில் உலகளாவிய வெள்ளை பந்து பட்டத்தை வெல்லவில்லை.
அவர்கள் 2015 மற்றும் 2019 உலகக் கிண்ணங்களில் நெருங்கி வந்தனர், ஆனால் இறுதிப் போட்டியில் தோல்வியைத் தழுவினர்.
துபாயில் வலிமையான இந்திய அணியை அவர்களால் தோற்கடிக்க முடியுமா?
கடந்த வாரம் தான், இந்தியா நியூசிலாந்தை வீழ்த்தியது, அவர்களை 205 ஓட்டங்களுக்கு ஆல் அவுட்டாக்கி, துபாயில் 249 ஓட்டம் என்ற இலக்கை வெற்றிகரமாக இந்தியா பாதுகாத்தது.
இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் நியூசிலாந்தின் பேட்டிங் வரிசையை தகர்த்தனர்.
குறிப்பாக வருண் சக்ரவர்த்தி தொடரின் முதல் வீரராக இந்த ஆட்டத்தில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அதேநேரம், துடுப்பாட்டத்தில் ஸ்ரேயாஸ் அய்யர் 79 ஓட்டங்களை எடுத்து சிறந்து விளங்கினார்.
இருப்பினும், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான அவர்களின் உத்வேகமான செயல்பாட்டிலிருந்து நியூசிலாந்து நம்பிக்கையைப் பெற்றுள்ளது.
தென்னாப்பிரிக்கா குழு பி இல் முதலிடத்தில் இருந்த போதிலும் இந்த தோல்வியுடன் வெளியேற்றப்பட்டனர்.
லாகூரில் ரச்சின் ரவீந்திர மற்றும் கேன் வில்லியம்சன் சதங்களை அடித்தனர், அதே நேரத்தில் மிட்செல் சாண்ட்னர் பந்தில் ஆதிக்கம் செலுத்தினர்.
சாண்ட்னர் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர், மைக்கேல் பிரேஸ்வெல் மற்றும் க்ளென் பிலிப்ஸ் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி தென்னாப்பிரிக்காவின் துரத்தலை சுழற்பந்து வீச்சால் நசுக்கினர்.
டேவிட் மில்லரின் அபார சதத்திற்குப் பின்னரும், நியூசிலாந்து 50 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வசதியான வெற்றியைப் பெற்றது.
தென்னாப்பிரிக்காவுக்கு இது மற்றொரு ஏமாற்றமளிக்கும் முடிவாக அமைந்தது, ஏனெனில் அவர்கள் போட்டியின் முதல் தோல்வியைத் தொடர்ந்து வெளியேறினர்.