ஐநாவின் 58ஆவது கூட்டத் தொடர் நடந்து கொண்டிருக்கும் ஒரு காலகட்டத்தில்,ரணில் விக்ரமசிங்கவை அல்ஜசீரா அம்பலப்படுத்தியிருக்கிறது.
2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஐநாவில் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானமானது பொறுப்புக் கூறலுக்கானது. அதாவது நிலைமாறு கால நீதிக்கானது. இந்தத் தீர்மானத்தில் இலங்கை அரசாங்கம் இணை அனுசரணையாளராக செயல்பட்டது. அதாவது அரசாங்கமும் சேர்ந்து அந்தத் தீர்மானத்தை நிறைவேற்றியது. அதற்கு முன் நிறைவேற்றப்பட்ட எல்லாத் தீர்மானங்களும் அரசாங்கத்துக்கு எதிரானவை. இலங்கை அரசாங்கங்களால் ஏற்றுக் கொள்ளப்படாதவை.அதற்கு பின்வந்த தீர்மானங்களும் அத்தகையவைதான்.
2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட நிலைமாறு கால நீதிக்கான அந்தத் தீர்மானத்துக்கு இலங்கை இணை அனுசரணை வழங்கியபொழுது ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்தார். மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருந்தார். அதாவது இலங்கைத் தீவில் நிலைமாறு கால நீதிக்கான ஐநா தீர்மானத்திருகு ரணிலும் மைத்திரியும் பெற்றோர் ஆவர். ஆனால் 2018 ஆம் ஆண்டு மைத்திரிபால சிறிசேன அந்தத் தீர்மானத்தைக் காட்டிக்கொடுத்தார். மஹிந்தவோடு இணைந்து அதற்கு எதிராகத் திரும்பினார். அதனால் பழி அவர் மீதுதான் விழுந்தது. அதாவது நிலைமாறு கால நீதியின் பெற்றோரில் ஒருவராகிய மைத்திரி தன் குழந்தையைக் குப்பைத் தொட்டிக்குள் வீசினார் என்று.
ஆனால் இரண்டாயிரத்தி இருபத்தி நாலாம் ஆண்டு நடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்துவதற்காக உருவாக்கப்பட்ட மக்கள் அமைப்பு,யாழ்ப்பாணம் உரும்பிராயில் சுமந்திரனைச் சந்தித்தபோது அவர் என்ன சொன்னார்? ரணில் விக்கிரமசிங்கதான் அதைக் குழப்பியவர் என்று சொன்னார். ரணில் விக்கிரமசிங்க நிலைமாறு கால நீதிக்கு விசுவாசமாக இருக்கவில்லை என்றும் சொன்னார். ஆனால் அவர் அதை உரும்பிராயில் வைத்துச் சொல்வதற்கு சில மணித்தியாலங்களுக்கு முன்பு திருநெல்வேலியில்,யாழ். பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட வளாகத்தில், ரணிலும் அமர்ந்திருந்த மேடையில் உரையாற்றும் பொழுது என்ன சொன்னார்? 2005 ஆம் ஆண்டு உங்களைத் தெரிவு செய்யாமல் விட்டதற்காக தமிழ் மக்கள் வருந்துகிறார்கள் என்ற பொருள்பட உரையாற்றினார்.
இலங்கைத் தீவில் நிலைமாறு கால நீதி எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தியது. அதற்கு ரணிலும் பொறுப்பு; மைத்திரியும் பொறுப்பு. மட்டுமல்ல அவர்களோடு பங்காளிகளாக இருந்த தமிழ்த் தரப்பைச் சேர்ந்த சம்மந்தரும் பொறுப்பு ; சுமந்திரனும் பொறுப்பு.
2015இல் நிலைமாறு கால நீதிக்கான தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கிய ரணில் சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்ட அல்ஜசீராவின் நேர்காணலில் என்ன கூறுகிறார்? பொறுப்புக் கூறல் தொடர்பில் பொறுப்பற்ற விதமாகப் பதிலளிக்கின்றார்.தன்னை நேர்கண்ட மஹ்தி ஹசனை மடக்குவதாக நினைத்துக் கொண்டு அவர் சொன்ன பதில்கள் அவர் பொறுப்புக் கூறலுக்கு உண்மையாக இல்லை என்பதை வெளியே கொண்டு வந்திருக்கின்றன.
அல்ஜசீராவின் “ஹெட் டு ஹிட் “என்ற அந்த நிகழ்ச்சியை ஒரு பேட்டி என்று அழைப்பதை விடவும் குறுக்கு விசாரணை என்றுதான் அழைக்க வேண்டும். அரசியல்வாதிகளை பேட்டி காணச் செல்லும் ஊடகவியலாளர்கள் எப்படி எல்லாம் வீட்டு வேலை செய்திருக்க வேண்டும் என்பதற்கு அது ஒரு தரமான உதாரணம். வீட்டு வேலை செய்யாமல் கேள்வி கேட்கப் போகும் ஊடகவியலாளர்கள் மஹ்தி ஹசனிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.
ரணிலைக் அவர் பல இடங்களில் திணறடிக்கிறார். ரணிலின் அரசியல் வாழ்வில் அவர் இந்த அளவுக்கு அவமதிக்கப்பட்ட அல்லது அம்பலப்படுத்தப்பட்ட ஒரு நேர்காணல் இருக்க முடியாது. அந்த நேர்காணலைக் குறித்து முகநூலில், ரணிலுக்கு எதிராக முஸ்லிம் நண்பர்கள் அதிகம் விமர்சனங்களைப் பதிவெற்றி வருகிறார்கள்.
ரணில் அந்த நேர்காணல் முழுவதிலும் தன்னை ஒரு சிங்கள பௌத்த பெருந்தேசிய வாதத்தின் பாதுகாவலனாகவே காட்டிக்கொள்கிறார். அவருடைய லிப்ரல் முகமூடியை மஹ்தி ஹசன் அவமானகரமான விதங்களில் கிழித்தெறிந்து விடுகிறார்.
அந்த நேர்காணல் முழுவதிலும் ரணில் ராஜபக்சக்களை பாதுகாக்க முயல்கிறார். ஆனால் அதை அதைவிடச் சரியான வார்த்தைகளை சொன்னால் அவர் சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பின் நிகழ்ச்சி நிரலை நியாயப்படுத்துகிறார் என்பதே பொருத்தமானது. அவ்வாறு நியாயப்படுத்த முற்படுகையில் அவர் போர்க் குற்றங்கள் தொடர்பாக பொறுப்புக் கூறுவதற்குத் தயாரற்றவராகத் தன்னைக் காட்டிக் கொள்கிறார். முஸ்லிம்களுக்கு பொறுப்பு கூறத் தயாரற்றவராகத் தன்னை காட்டிக் கொள்கிறார்.சிங்கள கத்தோலிக்கர்களையும் அவர் அங்கே அவமதிக்கிறார். முழுக்க முழுக்க ஒரு சிங்கள பௌத்த பெருந்தேசியவாதியாக அந்த இடத்தில் தோற்றம் தருகிறார்.ஆனால் அவர்தான் 2015 ஆம் ஆண்டு நிலைமாற கால நீதிக்கான தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கிய இலங்கை அரசாங்கத்தின் பிரதமராக இருந்திருக்கிறார்.
எனவே அந்த நேர்காணல் ரணிலை அம்பலப்படுத்தியது என்பதை விடவும் சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பை அம்பலப்படுத்தியிருக்கிறது. லிபரல் முகமூடி அணிந்த தலைவரும் சரி அவ்வாறு முகமூடி அணிந்திராத தலைவர்களும் சரி, இடதுசாரி முகமூடி அணிந்த தலைவர்களும் சரி எல்லாருமே இறுதியிலும் இறுதியாக சிங்கள பௌத்த அரசு கட்டமைப்பை பாதுகாப்பவர்கள்தான்.இதில் இப்பொழுது கடைசியாகத் தெரிவு செய்யப்பட்டிருக்கும் தேசிய மக்கள் சக்தியும் அடங்கும்.
ரணில் அல்ஜசிராவில் அம்பலப்படுத்தப்படுவதற்கு முன்னரே கடந்த 25 ஆம் திகதி ஜெனிவாவில் புதிய வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் தனது உரையில் என்ன சொல்லியிருக்கிறார்?. அதன் பின் கடந்த மூன்றாம் திகதி ஐநா மனித உரிமைகள் ஆணையாளருடைய வாய்மூல அறிக்கை வெளியிடப்பட்ட பின் அதற்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் வழங்கிய பதிலில் என்ன கூறப்பட்டுள்ளது? தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பொறுப்புக்கு கூறத் தயாராக இல்லை என்பதே ஐநாவில் அவர்கள் வெளிப்படுத்திய செய்தியின் சாரம்.அதாவது சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பு என்றைக்குமே பொறுப்புக்கூறாது.அது ராஜபக்சக்களாக இருந்தாலும் சரி,ரணிலாக இருந்தாலும் சரி,சந்திரிகாவாக இருந்தாலும் சரி, மைத்திரியாக இருந்தாலும் சரி, அனுராவாக இருந்தாலும் சரி,யாருமே பொறுப்புக் கூற மாட்டார்கள்.
இதில் இங்கே தமிழ் மக்கள் கவனிக்க வேண்டிய மற்றொரு விடயம் உண்டு. ஐநா கூட்டத் தொடர்களின் போதுதான் சனல் நாலு வீடியோக்கள் வெளிவந்தன.ஈஸ்டர் குண்டு வெடிப்பு தொடர்பான ஒப்புதல் வாக்கு மூலங்களை வெளிப்படுத்தும் வீடியோக்கள் வெளிவந்தன. இப்பொழுதும் ஐநா கூட்டத் தொடரின் போதுதான் ரணிலை அம்பலப்படுத்தும் அல்ஜஸீராவின் வீடியோவும் வெளிவந்திருக்கிறது. அது ரணிலை மட்டும் அம்பலப்படுத்தவில்லை. இலங்கைத் தீவின் சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பு பொறுப்புக்கூறும் பண்பு இல்லாதது என்பதையும் மறைமுகமாக வெளிப்படுத்துகின்றது.ஐநா கூட்டத் தொடர் நடக்கும் காலங்களில் இலங்கை அரசாங்கங்களின் மீது அழுத்தங்களை பிரயோகிக்கும் உத்திகளா இவை? ஆனால் கடந்த 15 ஆண்டுகளிலும் அந்த அழுத்தங்கள் தமிழ் மக்களுக்கு எதைப் பெற்றுத் தந்தன? அதேசமயம் மேற்கு நாடுகளுக்கு எதைப் பெற்றுக் கொடுத்தன?