சவுதி அரேபியாவில் அமெரிக்கா-உக்ரேன் இடையே நடந்த ஒரு நாள் பேச்சுவார்த்தைக்குப் பின்னர், அமெரிக்கா முன்மொழிந்த ரஷ்யாவுடன் உடனடியான 30 நாள் போர் நிறுத்தத்தை ஏற்கத் தயாராக இருப்பதாக கெய்வ் தெரிவித்துள்ளது.
அமெரிக்க வெளிவிகாரச் செயலாளர் மார்கோ ரூபியோ, இந்த வாய்ப்பை ரஷ்யாவிடம் முன்வைக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், “நேர்மறையான” திட்டத்திற்கு ரஷ்யாவை ஒப்புக்கொள்ள வைப்பது இப்போது அமெரிக்காவின் பொறுப்பாகும் என்று உக்ரேன் ஜனாதிபதி வோலோடோமிர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.
ஜெட்டாவில் செவ்வாயன்று (11) நடந்த பேச்சுவார்த்தை, ஓவல் அலுவலகத்தில் ஜெலென்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கும் இடையிலான முன்னதாக நடந்த சந்திப்பின் அசாதாரண மோதலுக்குப் பின்னர் இரு நாடுகளுக்கும் இடையிலான முதல் அதிகாரப்பூர்வ சந்திப்பாகும்.
பேச்சுவார்த்தையின் பின்னர், வொஷிங்டன் நிறுத்தி வைத்திருந்த உக்ரேனுக்கான உளவுத்துறை பகிர்வு மற்றும் பாதுகாப்பு உதவியை உடனடியாக மீண்டும் தொடங்குவதாகவும் அமெரிக்கா ஒரு கூட்டு அறிக்கையில் குறிப்பிட்டது.
செவ்வாய்க்கிழமை மாலை ஜெட்டாவில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் பேசிய ரூபியோ, ரஷ்யா இந்த திட்டத்தை ஏற்றுக்கொள்ளும் என்று நம்புவதாகக் கூறினார்.
30 நாள் போர்நிறுத்தத்திற்கான சலுகை, கடலிலும் வானத்திலும் பகுதியளவு போர்நிறுத்தத்திற்கான ஜெலென்ஸ்கியின் முன்மொழிவுக்கு அப்பாற்பட்டது.
ஜெட்டாவில் நடந்த பேச்சுவார்த்தையின் ஆக்கபூர்வமான தன்மைக்கு உக்ரேன் ஜனாதிபதி ட்ரம்பிற்கு நன்றி தெரிவித்தார்.
எனினும், பேச்சுவார்த்தை தொடர்பில் மொஸ்கோ இன்னும் பதிலளிக்கவில்லை.
பேச்சுவார்த்தையின் முடிவுகள் குறித்து வொஷிங்டனால் விளக்கமளிக்கப்பட்ட பின்னர் ரஷ்யா ஒரு அறிக்கையை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரஷ்யா 2022 பெப்ரவரியில் உக்ரேன் மீது முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கியது.
தற்போது அது உக்ரேன் பிரதேசத்தில் சுமார் 20% கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளது.
இதேவேளை, போர் நிறுத்தத்திற்கான இராஜதந்திர பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், உக்ரேனின் போர்க்கள நிலைகள், குறிப்பாக ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில் கடும் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.