பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பகுதியில் ஆயுதமேந்திய தீவிரவாதிகள் 400 க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற ரயிலைத் தாக்கி, அவர்களில் பலரை பணையக் கைதிகளாக சிறைப்பிடித்து வைத்திருந்ததாக அந்நட்டு பாதுகாப்பு வட்டாரங்கள் செவ்வாய்க்கிழமை (11) தெரிவித்தன.
குவெட்டாவிலிருந்து பெஷாவர் நோக்கிச் சென்ற ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் மீது பலூச் விடுதலைப் படை (BLA) துப்பாக்கிச் சூடு நடத்தியது.
தொலைதூர சிபி மாவட்டத்தில் ரயிலைத் தாக்குவதற்கு முன்பு தண்டவாளத்தில் குண்டுவீசித் தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறெனினும், 58 ஆண்கள், 31 பெண்கள் மற்றும் 15 குழந்தைகள் உட்பட 104 பயணிகளை பயங்கரவாதிகளிடமிருந்து வெற்றிகரமாக மீட்டுள்ளதாக பாகிஸ்தானிய பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போதைய நிலவரப்படி, 16 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர், மேலும் காயமடைந்த 17 பேர் மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உள்ளூர் அறிக்கைகளின்படி, பலூச் அரசியல் கைதிகளை அதிகாரிகள் 48 மணி நேரத்திற்குள் விடுவிக்காவிட்டால், பணையக் கைதிகளைக் கொன்றுவிடுவதாக போராளிகள் அச்சுறுத்தல் விடுத்திருந்தனர்.
மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
பாகிஸ்தான் அதிகாரிகள் – இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா உட்பட பல மேற்கத்திய நாடுகளும் BLA-வை ஒரு பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளன.