அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்ட போதிலும், நாடளாவிய ரீதியில் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ள பணிப்புறக்கணிப்பை கைவிடப்போவதில்லையென அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.
மேலும் குறித்த பணிப்புறக்கணிப்பு நாளை காலை 08.00 மணி வரை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
குறித்த சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், இன்று காலை 08.00 மணி முதல் நாடளாவிய ரீதியில் 24 மணித்தியால அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க தொழிற்சங்கம் தீர்மானித்திருந்தது
இது தொடர்பில் ஊடகங்களுக்கு பேசிய GMOA ஊடக பேச்சாளர் சம்மில் விஜேசிங்க, தெரிவிக்கையில், சந்தேக நபர் கைது செய்யப்பட்டு இருந்தாலும் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவருக்கு ஆதரவை காட்டுவதற்காக வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடர மருத்துவ சகோதரத்துவம் தீர்மானித்துள்ளது.
சந்தேக நபரை கைது செய்யுமாறு கோரி இந்த அடையாள வேலைநிறுத்தம் மட்டுப்படுத்தப்படவில்லை மாறாக சம்பவம் தொடர்பில் கடும் அதிருப்தியையும் எதிர்ப்பையும் வெளிப்படுத்துவதாக அவர் தெரிவித்தார்.
மேலும் இச் சம்பவம் இலங்கையில் சுகாதாரப் பணியாளர்களின் பாதுகாப்பு குறித்த கேள்வியை எழுப்பியுள்ளதாகவும், வேலைநிறுத்தம் சமூகத்தில் நிகழும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துக்காட்டுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.