படலந்தா (Batalanda) ஆணைக்குழுவின் அறிக்கை குறித்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (16) சிறப்பு அறிக்கை ஒன்றை வழங்கவுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி (UNP) அலுவலக தகவலின்படி, முன்னாள் ஜனாதிபதி இதன்போது, அறிக்கையின் உண்மைகள் மற்றும் பரிந்துரைகள் குறித்து சிறப்பு வெளிப்பாட்டை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சபைத் தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க கடந்த வெள்ளிக்கிழமை (14) நாடாளுமன்றத்தில் ‘படலந்தா ஆணைக்குழு அறிக்கையை’ சமர்ப்பித்ததைத் தொடர்ந்து ரணில் விக்கிரமசிங்கவின் இந்த சிறப்பு அறிக்கை இன்று வெளியாகவுள்ளது.
அதேநேரம், படலந்தா ஆணைக்குழுவின் அறிக்கை மீதான நாடாளுமன்ற விவாதம் எதிர்வரும் 10 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக நாடாளுமன்றத் தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது.
இரண்டு கட்டங்களின் கீழ் இந்த விவாதம் நடைபெறவுள்ளதாக நாடாளுமன்ற சட்ட சேவைகள் பணிப்பாளர் ஜெயலத் பெரேரா அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் பிமல் ரத்நாயக்க, தேவையான நடவடிக்கை குறித்த ஆலோசனைக்காக படலந்தா ஆணைக்குழு அறிக்கை சட்டமா அதிபருக்கு அனுப்பப்படும் என்றும், அறிக்கையை ஆய்வு செய்து பரிந்துரைகளை வழங்க ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஒரு சிறப்புக் குழுவை நியமிப்பார் என்றும் கூறியிருந்தார்.
1988 முதல் 1990 வரையிலானக் காலகட்டத்தில் இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள், கொலைகள் மற்றும் காணாமல் போதல்கள் குறித்து படாலந்தா ஆணைக்குழு அறிக்கை தகவலை வெளிப்படுத்தி இருந்தது.
ஜனாதிபதியாகப் பதவியேற்றதும் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, இந்த சம்பவங்களை விசாரிக்க 1995 செப்டம்பர் 21 ஆம் திகதி ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவை நிறுவினார்.
படலந்தா ஆணைக்குழு என்று அழைக்கப்படும் இது, படலந்தா வீட்டுவசதித் திட்டத்தில் தனிநபர்கள் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்படல், சித்திரவதை செய்தல், படுகொலை செய்தல் மற்றும் காணாமல் போதல் ஆகியவற்றை ஆராயும் பணியை மேற்கொண்டது.
சுமார் மூன்று ஆண்டுகள் சாட்சியங்களைச் சேகரித்த பின்னர் ஆணைக்குழு, தனது அறிக்கையை 1998 இல் ஜனாதிபதி சந்திரிகா பண்டாராநாயக்க குமாரதுங்கவிடம் சமர்ப்பித்தது.
எனினும், படலந்தா ஆணைக்குழு அறிக்கையின் பரிந்துரைகள் ஒருபோதும் செயல்படுத்தப்படவில்லை.
இந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சர்வதேச ஊடகமான அல் ஜசீராவுக்கு அண்மையில் அளித்த சர்ச்சைக்குரிய நேர்காணலைத் தொடர்ந்து, படலந்தா ஆணைக்குழு அறிக்கை மீண்டும் ஒருமுறை வெளிச்சத்திற்குக் கொண்டுவரப்பட்டது.