லஷ்கர்-இ-தொய்பா (Lashkar-e-Taiba) பயங்கரவாத அமைப்பின் முக்கிய உறுப்பினரான அபு கட்டால் (Abu Qatal) பாகிஸ்தானில் அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகளால் சனிக்கிழமை (15) இரவு சுட்டுக் கொல்லப்பட்டார்.
பயங்கரவாத அமைப்பின் முக்கிய செயல்பாட்டாளரான கட்டால், ஜம்மு-காஷ்மீரில் பல தாக்குதல்களைத் திட்டமிட்டதற்காக அறியப்பட்டவர் என இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த 2008 நவம்பர் 26 ஆம் திகதி மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத்தின் நெருங்கிய நண்பரான அபு கட்டால், 2024 ஜூன் 9 ஆம் திகதி ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் உள்ள ஷிவ் கோரி ஆலயத்தில் இருந்து திரும்பி வந்த யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மீது நடத்தப்பட்ட தாக்குதலில் முக்கிய பங்கு வகித்தார்.
இந்தத் தாக்குதல் கட்டாலின் தலைமையில் திட்டமிடப்பட்டது.
2023 ரஜோரி தாக்குதலில் ஈடுபட்டதற்காக இந்திய தேசிய புலனாய்வு நிறுவனம் (NIA) தனது குற்றப்பத்திரிகையில் அபு கட்டாலின் பெயரையும் இணைத்தது.
ரஜோரி தாக்குதல் வழக்கில், தடைசெய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த பாகிஸ்தானின் மூன்று நிர்வாகிகள் உட்பட ஐந்து பேர் மீது தேசிய புலனாய்வு நிறுவனம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
ஜம்மு காஷ்மீரில் நடந்த பல பயங்கரவாத சம்பவங்களில் அபு கட்டாலின் பங்கு குறித்து இராணுவம் உட்பட பல பாதுகாப்பு அமைப்புகள் கண்காணித்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.