செங்கடல் கப்பல் போக்குவரத்துக்கு எதிரான தாக்குதல்களுக்கு பதிலடியாக, ஏமனின் ஈரானுடன் இணைந்த ஹவுத்திகள் (Houthis) மீது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சனிக்கிழமை (15)பாரிய அளவிலான இராணுவத் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளார்.
இந்த தாக்குதலில் குறைந்தது 19 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஹவுத்திகளின் முக்கிய ஆதரவாளரான ஈரானை, அந்தக் குழுவிற்கான ஆதரவை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் ட்ரம்ப் எச்சரித்தார்.
இதனிடையே, ஹவுத்திகளுக்கு எதிரான புதிய தாக்குதல்களானது பல நாட்கள் அல்லது வாரங்கள் நீடிக்கும் என்று வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
கடந்த ஜனவரியில் ட்ரம்ப் பதவியேற்றதிலிருந்து மத்திய கிழக்கில் அமெரிக்காவின் மிகப்பெரிய இராணுவ நடவடிக்கையாக இது அமைந்துள்ளது.
அமெரிக்கா தனது அணுசக்தி திட்டம் தொடர்பாக தெஹ்ரான் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கும் அழுத்தத்தை அதிகரித்து வரும் அதேவேளையில், ஈரானுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க முயற்சிக்கும் நிலையில் ஹவுத்திகளுக்கு எதிரான தாக்குதல் வந்துள்ளது.
இதேவேளை, ஏமன் தலைநகர் சனாவில் அமெரிக்க தாக்குதல்களில் குறைந்தது 13 பொதுமக்கள் உயிரிழந்ததாகவும், ஒன்பது பேர் காயமடைந்ததாக ஹவுத்தி நடத்தும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், சாதாவின் வடக்கு மாகாணத்தில் அமெரிக்க தாக்குதல்களில் நான்கு குழந்தைகள் மற்றும் ஒரு பெண் உட்பட ஆறு பேர் உயிரிழந்ததுடன், 11 பேர் காயமடைந்ததாகவும் ஹவுத்தி நடத்தும் அல்-மசிரா தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த தசாப்தத்தில் ஏமனின் பெரும்பகுதியைக் கட்டுப்பாட்டில் எடுத்த ஆயுதமேந்திய இயக்கமான ஹவுத்திகள், 2023 நவம்பர் முதல் கப்பல் போக்குவரத்தை குறிவைத்து 100க்கும் மேற்பட்ட தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
இது உலகளாவிய வர்த்தகத்தை சீர்குலைத்துடன், அதிகளவிலான பதில் நடவடிக்கையில் அமெரிக்க இராணுவத்தையும் ஈடுபடுத்தியுள்ளது.