முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரங்கள் பங்கெடுக்கும் 2025 சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் டி:20 இறுதிப் போட்டியில் இந்தியா மாஸ்டர்ஸ் அணியானது, மேற்கிந்தியத்தீவுகள் மாஸ்டர்ஸ் அணியை இன்று எதிர்கொள்கிறது.
இந்தப் போட்டி ராய்ப்பூரில் அமைந்துள்ள ஷாஹீத் வீர் நாராயண் சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இரவு 07.30 மணிக்கு ஆரம்பமாகும்.
முதல் சுற்று ஆட்டத்தின் முடிவில், ஐந்து போட்டிகளில் நான்கு வெற்றிகள் மற்றும் ஒரு தோல்வியுடன் இந்தியா மாஸ்டர்ஸ் அணி இரண்டாவது இடத்தை பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.
மறுபுறம், ஐந்து போட்டிகளில் மூன்று வெற்றிகள் மற்றும் இரண்டில் தோல்விகளுடன் மேற்கிந்தியத்தீவுகள் மாஸ்டர்ஸ் அணி நான்காவது இடத்தைப் பிடித்து, அரையிறுதிக்கு முன்னேறியது.
முதல் அரையிறுதியில் இந்தியயா மாஸ்டர்ஸ் அணி, அவுஸ்திரேலியா மாஸ்டர்ஸ் அணியை 94 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா மாஸ்டர்ஸ், யுவராஜ் சிங்கின் 59 ஓட்டங்கள், சச்சின், பின்னி மற்றும் யூசுப் பதான் ஆகியோரின் சிறப்பான பங்களிப்புடன் 220 ஓட்டங்களை குவித்தது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா மாஸ்டர்ஸ் வெறும் 126 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
பந்து வீச்சில் இந்தியா மாஸ்டர்ஸ் சார்பில் அதிகபடியாக ஷாபாஸ் நதீம் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.
மறுபுறம், இரண்டாவது அரையிறுதியில் மேற்கிந்தியத்தீவுகள் மாஸ்டர்ஸ் அணி இலங்கை மாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தியது.
முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத்தீவுகள் மாஸ்டர்ஸ் ராம்தின் அரைசதத்துடன் 5 விக்கெட் இழப்புக்கு 179 ஓட்டங்களை எடுத்தது.
இது குறைவான ஓட்ட எண்ணிக்கையாக பார்க்கப்பட்டாலும், பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை மாஸ்டர்ஸ் அணியால் 20 ஓவர்கள் நிறைவில் 173 ஓட்டங்களை மாத்திரம் பெற முடிந்தது.
மேற்கிந்தியத்தீவுகள் மார்ஸ்டர்ஸ் சார்பில் பந்து வீச்சில் டினோ பெஸ்ட் அதிகபடியாக நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்த நிலையில் இன்று நடைபெறும் இறுதிப் போட்டியானது பரபரப்பான ஆட்டமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.