அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் உத்தரவை தொடர்ந்து அமெரிக்க அரசாங்கத்தின் நிதியுதவியுடன் இயங்கும் வொய்ஸ் ஒவ் அமெரிக்கா (Voice Of America) செயல் இழக்கும் நிலை உருவாகியுள்ளது.
வொய்ஸ் ஒவ் அமெரிக்கா (Voice Of America) தனக்கு எதிரானது எனவும் தீவிரவாத போக்குகொண்டது எனவும் குற்றம்சாட்டியுள்ள டொனால்ட் டிரம்ப் அதனை செயல் இழக்க செய்யும் உத்தரவில் கைச்சாத்திட்டுள்ளார்.
டிரம்பின் இந்த உத்தரவு வரிசெலுத்துவோர் இனி தீவிரபிரச்சாரங்களிற்கு அடிமையாகாமல் இருப்பதை உறுதி செய்யும் என தெரிவித்துள்ள வெள்ளை மாளிகை தனது அறிக்கையில் வொய்ஸ் ஒவ் அமெரிக்காவை விமர்சித்து அரசியல்வாதிகள் வலதுசாரி ஊடகங்கள் தெரிவித்த கருத்துக்களை இணைத்துக்கொண்டுள்ளது.
இரண்டாம் உலக யுத்தத்தின் போது நாஜிகளின் பிரச்சாரத்தை எதிர்கொள்ள வானொலி சேவையாக உருவாக்கப்பட்ட வொய்ஸ் ஒவ் அமெரிக்கா (Voice Of America) ஒருவாரத்திற்கு சர்வதேச அளவில் மில்லியன் கணக்கான மக்களை சென்றடைவதாக தெரிவிக்கப்படுகின்றது.
டிரம்பின் உத்தரவு வொய்ஸ் ஒவ் அமெரிக்கா (Voice Of America) அதன் முக்கியமான பணியை செய்யமுடியாமல் செய்துள்ளது, அமெரிக்காவின் எதிர் நாடுகளான ரஸ்யா ஈரான் சீனா போன்றவை அமெரிக்காவை அவமதிப்பதற்காக , அவமானத்தை ஏற்படுத்துவதற்கான கதையாடல்களை உருவாக்குவதற்கு மில்லியன் டொலர்களை செலவிடும் நேரத்தில் எங்களால் அதற்கு எதிரான முக்கியமான பணியைமுன்னெடுக்க முடியாமல் உள்ளது என வொய்ஸ் ஒவ் அமெரிக்காவின் இயக்குநர் மைக் அப்ரமோவிட்ஸ் தெரிவித்துள்ளார்.
அதேவேளை டிரம்பின் இந்த உத்தரவு சுதந்திரமான ஊடகங்கள் குறித்த அமெரிக்காவின் நீண்ட கால அர்ப்பணிப்பிற்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றது என அமெரிக்காவின் தேசிய ஊடக கழகம் தெரிவித்துள்ளது.