நீதிமன்றுத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தி, கொலை செய்வதற்கு சதித் திட்டம் தீட்டிய சந்தேகநபர்கள் இதுவரையில் இனங்காணப்படாத நிலையில் நாட்டில் மக்களின் உயிர் பாதுகாப்புடன் தேசிய பாதுகாப்பும் சவாலுக்குட்படுத்தப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அநுராதபுரம் மாவட்டத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” இன்று சமூகம் குரூரமான கொலை கலாசாரத்திற்கும், பாதாள உலகக் குழுக்களுக்கும் இரையாக்கப்பட்டுள்ளன. நாட்டில் சட்டம் அமுல்படுத்தப்படுவதாக தெரியவில்லை. நாட்டில் சட்டம் அமுலில் இல்லை.
கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பொலிஸ் மா அதிபரைக் கூட இந்த அரசாங்கத்தால் கண்டுபிடிக்க முடியவில்லை. தற்போதைய அரசாங்கத்தின் புலனாய்வுத் துறையின் இயலுமை எங்கனம் என்பதை இவ்வாறானதொரு சூழ்நிலையை வைத்து ஊகிக்க முடிகிறது.
நீதிமன்றில் துப்பாக்கிச் சூடு நடத்தி, கொலை செய்ய சதித் திட்டம் தீட்டிய சந்தேகநபர் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை. இதன் காரணமாக மக்களின் உயிர் பாதுகாப்புடன் தேசிய பாதுகாப்பும் சவாலுக்குட்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து பேசும் போதும், கேள்வி எழுப்பும் போதும், தேசிய பாதுகாப்பில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று அரசாங்கம் கூறிவருகிறது.
ஆனால் அண்மையில் தெவிநுவர பிரதேசத்தில் கூட இரட்டைக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. வளமான நாடு அழகான வாழ்க்கையை உருவாக்குவோம் என்று கூறிக் கொண்டு ஆட்சிக்கு வந்த திசைகாட்டி அரசாங்கம், இன்று வாழ முடியாத நாட்டை உருவாக்கி, பாதாள உலகத்திற்கு கீழ்படிந்த ஓர் வாழ்க்கையை கட்டியெழுப்பியுள்ளனர்” இவ்வாறு சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.