மக்களின் பணத்தை பறிக்கும் வசூல் முகவர்களாக வங்கிகளை மத்திய அரசு ஆக்கியுள்ளதாக கார்கே விமர்சித்துள்ளார்.
இந்தியாவில் வங்கிகளில் கணக்கு வைத்து இருப்பவர்கள் ஏ.டி.எம். மூலம் 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால், ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ.21 கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது அக் கட்டணம் 23ரூபாயாக ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டத்தை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ”ஏ.டி.எம். கட்டண உயர்வு வேதனை தருகிறது எனவும், துரதிர்ஷ்டவசமாக நமது வங்கிகளை மக்களின் பணத்தை பறிக்கும் வசூல் முகவர்களாக மத்திய அரசு ஆக்கியுள்ளது எனவும் குற்றம் சுமத்தியுள்ளார்.
அத்துடன் ஏற்கனவே மக்களின் சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பை பராமரிக்கவில்லை என்று ரூ.43,500 கோடி மக்கள் பணத்தை மத்திய அரசு பறித்துள்ளது எனவும், இதுதவிர பிற சேவை கட்டணங்கள் என்ற பெயரிலும் மக்களின் பணம் எடுக்கப்படுகிறது எனவும், இதுதான் பா.ஜனதா அரசின் கொள்கை எனவும் மல்லிகார்ஜுன கார்கே விசனம் தெரிவித்துள்ளார்.