உலக அளவில் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் ஆப்பிள் நிறுவனத்தின் மீது மொனோபொலி குற்றச்சாட்டை அமெரிக்காவில் அந்த நாட்டின் நீதித்துறை சுமத்தியுள்ளது.
சட்டத்துக்கு புறம்பாக ஸ்மார்ட்போன் சந்தையில் கிளவுட் ஸ்டோரேஜ், கிராஸ்-பிளாட்ஃபார்ம் மெசேஜிங் செயலிகள், தேர்ட் பார்ட்டி டிஜிட்டல் வொலட் மீதான கட்டுப்பாடு, தேர்ட் பார்ட்டி ஸ்மார்ட்வாட்ச்கள், ஆப்பிள் ஐஓஎஸ் தளத்தில் இயங்குவதில் கட்டுப்பாடு என சந்தையில் தங்களது நிறுவனம் சார்ந்த தன்னிச்சையான ஆப்பிளின் செயல்பாடு காரணமாக இந்த வழக்கு தொடுக்கப்பட்டது.
இந்த வகையில் ஆன்டி-ட்ரஸ்ட் வயலேஷன் சார்ந்து கடந்த 14 ஆண்டுகளில் மூன்றாவது முறையாக இது மாதிரியான குற்றச்சாட்டை ஆப்பிள் நிறுவனத்தின் மீது முன்வைத்து அமெரிக்க நீதித்துறை வழக்கு தொடுத்தது. வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு, தங்களது நிறுவனத்தின் தனித்துவம் எனச் சொல்லி இப்போதைக்கு ஆப்பிள் நிறுவனம் சாமார்த்தியமாக காய் நகர்த்தி வருகிறது. ஆப்பிள் மீதான குற்றச்சாட்டு குறித்து விரிவாக பார்ப்போம்
ஆப்பிள் நிறுவனம்:
கடந்த 1976-ல் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இன்றைய நாளில் (ஏப்ரல் 01) நிறுவப்பட்டது ஆப்பிள் நிறுவனம். ஸ்டீவ் ஜாப்ஸ், ஸ்டீவ் வோஸ்னியாக் மற்றும் ரொனால்ட் வெய்ன் ஆகியோர் வணிக ரீதியாக இணைந்து இந்த முயற்சியை முன்னெடுத்தனர். ஆப்பிள் நிறுவனத்தின் முதல் தயாரிப்பு ஆப்பிள் 1 கணினி. இதனை வோஸ்னியாக் வடிவமைத்திருந்தார். அடிப்படை கணினி கிட்டாக இது விற்பனை செய்யப்பட்டது.
தொடர்ந்து கணினி மட்டுமல்லாது மொபைல் டிவைஸான ஐபோன், ஐபாட், Wearables அக்சஸரீஸ் என பலவற்றை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்தது. அதன் பின்னணியில் பல பொறியாளர்களின் உழைப்பு அடங்கியுள்ளது. அதன் ஊடாக ஆப்பிள் நிறுவனம் சர்வதேச அளவில் தனக்கென ஒரு பெயரை நிலை நிறுத்திக் கொண்டது. டெக் உலகின் பிதாமகனாக உருவெடுத்தது. இதற்குக் காரணம் ஆப்பிள் தயாரிப்பு சாதனங்களின் தரம், தனித்துவ பயன்பாட்டு அம்சம் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் எனவும் சொல்லலாம். ஆண்டுதோறும் புது புது சாதனங்களை ஆப்பிள் அறிமுகம் செய்வது வழக்கம். கடந்த செப்டம்பரில் யுஎஸ்பி டைப்-சி போர்ட் கொண்ட போன்களை முதல்முறையாக ஆப்பிள் அறிமுகம் செய்தது. இதன் மூலம் பாரம்பரிய ஆப்பிள் நிறுவன தயாரிப்புகளான ஐபோன், ஐபாட், மற்றும் அக்சஸரீஸ்களில் இருந்த Lightning (Connector) போர்ட்டுக்கு விடை கொடுக்கப்பட்டது. இது கூட ஐரோப்பாவில் ஏற்பட்ட அழுத்தத்தின் காரணமாக ஆப்பிள் மேற்கொண்ட நகர்வு. பொதுவாகவே ஆப்பிள் சாதனங்களில் அதன் தயாரிப்புகளை தான் பிரதானமாக பயன்படுத்த முடியும். இதற்கு உலக அளவில் ஆப்பிள் சாதன வாடிக்கையாளர்கள் மத்தியில் கிடைத்து வரும் வரவேற்பும் ஒரு காரணம்.
ஆப்பிள் மீதான குற்றச்சாட்டு? சந்தையில் கிடைத்த வரவேற்பை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ளும் வகையில் தந்திர நோக்கத்துடன் ஆப்பிள் நிறுவனம் சில கட்டுப்பாடுகளையும், முடக்கத்தையும் மேற்கொண்டது. உதாரணமாக வீட்டில் புதிதாக வாங்கும் மின்னணு சாதனங்களை இன்ஸ்டலேஷன் செய்வதற்காக வரும் சர்வீஸ் பிரதிநிதி, தங்களது நிறுவனத்தின் சில பொருட்களை புரோமோட் செய்வார். அது போல ஆப்பிள் நிறுவனமும் கிளவுட் ஸ்டோரேஜ் தொடங்கி ஸ்மார்ட்வாட்ச் பயன்பாடு வரையில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. அதன் மூலம் நிதி ஆதாயமும், சந்தையில் மோனோபோலியையும் கடைபிடித்துள்ளது. இதுதான் இப்போது ஆப்பிள் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு. இதனை ஒன்று அல்லது இரண்டு என வகைப்படுத்த முடியாத வகையில் பரவலாக ஆப்பிள் மேற்கொள்கிறது என அதில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக சந்தா மற்றும் அதற்கு இணையான தரம் இல்லா சேவையாக இருந்தாலும் இந்த ஈக்கோ சிஸ்டம் செட்-அப் காரணமாக பயனர்கள் ஆப்பிள் சாதனங்களில் இருந்து வேறு சாதனத்துக்கு ஸ்விட்ச் ஆகி செல்வது கடினம் என 88 பக்கங்கள் கொண்ட அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. வாடிக்கையாளர்கள், டெவலப்பர்கள், கன்டென்ட் கிரியேட்டர்கள், ஆர்டிஸ்ட்கள், பப்ளிஷர்ஸ், சிறு வணிகர்களிடமிருந்து பணம் பெறும் நோக்கில் ஆப்பிள் நிறுவனம் அதிகாரம் செலுத்துவதாக அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது. முடிவுக்கு வந்த பழைய வழக்கு: அதே நேரத்தில் கிரிப்டோகரன்சி தொழில்நுட்பம் சார்ந்து இயங்கும் பிரபல செயலிகளுக்கு சில கட்டுப்பாடுகளை ஆப்பிள் ஆப் ஸ்டோர் விதித்த விவகாரம் முடிவுக்கு வந்துள்ளது. ஐபோன்களில் இயங்கும் அந்த வகை செயலிகளுக்கு பணம் மற்றும் கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் நிர்ணயித்துள்ளது. இது தொடர்பாக கடந்த 2023-ம் ஆண்டு நவம்பரில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த சான் பிரான்சிஸ்கோ மாவட்ட நீதிமன்றம் அதனை அண்மையில் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.
இந்த குற்றச்சாட்டு குறித்து ஆப்பிளின் விளக்கம் என்ன?
ஆப்பிள் நிறுவன தயாரிப்புகளின் தனித்துவத்தை அச்சுறுத்தும் வகையில் இந்த குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. சந்தையில் எங்களது தயாரிப்புகளை தனித்து காட்டுவதே எங்களது கொள்கைகள் தான். அது ஹார்டுவேர், சாப்ட்வேர் மற்றும் சேவைகளை உள்ளடக்கியது. இது மாதிரியான குற்றச்சாட்டுகள் எங்களது வாடிக்கையாளர்கள் எங்களிடமிருந்து எதிர்பார்க்கும் தொழில்நுட்ப பயன்பாடுகளை தடுக்கும் வகையில் அமைந்துள்ளது.
மேலும், இது தவறான முன்னுதாரணமாக அமையும். இந்த வழக்கு சட்டத்தின் அடிப்படையில் தவறானது என நாங்கள் நம்புகிறோம். அதோடு இதனை எதிர்த்து வாதிடுவோம். ஆப்பிள் நிறுவனம் அமெரிக்க சந்தையில் மட்டுமல்லாது சர்வதேச சந்தையில் வணிகம் மேற்கொண்டு வருகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் என ஆப்பிள் செய்தித் தொடர்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் மீதான தீர்ப்பு டெக் நிறுவனங்களின் மோனோபோலி ஆதிக்கத்துக்கு முடிவுரை எழுதும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் நாட்களில் ஏஐ தொழில்நுட்பம் சார்ந்த சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் இது மாதிரியான வழக்குகளை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது என தொழில்நுட்ப வல்லுநர்கள் நம்புகின்றனர்.