கொழும்பில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் தற்போது குறித்த உத்தியோகபூர்வ வரவேற்பு நிகழ்வு இடம்பெற்றது.
இதேவேளை, உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை இன்று சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.
உத்தியோகபூர்வ வரவேற்பு
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் “நூற்றாண்டு நட்புறவின் வளமான எதிர்காலத்திற்கான உறுதிப்பாடு” என்ற எண்ணக்கருவை உறுதிப்படுத்தும் வகையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தவும், இருதரப்பு பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பில் பங்கேற்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்போது, எரிசக்தி, டிஜிட்டல் மயமாக்கல், பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், இந்தியாவுடனான கடன் மறுசீரமைப்பு தொடர்பான ஒப்பந்தங்கள் பரிமாறிக்கொள்ளப்படும். 120 மெகாவாட் திறன் கொண்ட சம்பூர் சூரிய மின் உற்பத்தி நிலையத்திற்கு அடிக்கல் நாட்டுவதில் இந்தியப் பிரதமரும் கலந்து கொள்ள உள்ளார்.5,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட தம்புள்ளை விவசாய சேமிப்பு வளாகம், இந்தியாவிலிருந்து நன்கொடையாகப் பெறப்பட்ட 5,000 மதத் தலங்களின் கூரைகளில் சூரிய மின் தகடுகளை நிறுவும் திட்டம் ஆகியவையும் இந்த விஜயத்தின் போது திறந்து வைக்கப்படும்.
மேலும், இந்தியப் பிரதமர், அநுராதபுரம் ஜெய ஸ்ரீ மகா போதிக்கு வழிபாடு நடத்துவதோடு, இந்திய அரசாங்கத்தின் நன்கொடையாகக் கட்டப்பட்ட மகாவ-அநுராதபுரம் தொடருந்து சமிக்ஞை அமைப்பு மற்றும் நவீனமயமாக்கப்பட்ட மகாவ-ஓமந்த தொடர்ந்து பாதையையும் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைக்க உள்ளார்.
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்றிரவு 8.33 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததார்.
தூதுக்குழு
அவரை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
இந்திய பிரதமருடன் அந்த நாட்டு வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் உள்ளிட்டோர் அடங்கலாக 60 பேர் கொண்ட தூதுக்குழு இலங்கை வந்துள்ளது.
இந்திய பிரதமர் இலங்கைக்கு விஜயம் செய்யும் நான்காவது சந்தர்ப்பம் இதுவாகும்.
பின்னர் இந்தியப் பிரதமர் நாளை (06) மறுநாள் பிற்பகல் இலங்கைக்கான தனது பயணத்தை முடித்துக்கொண்டு நாட்டை விட்டுப் புறப்பட உள்ளார்.