மாத்தறை, தேவேந்திர முனை ஸ்ரீ விஷ்ணு தேவாலயத்திற்கு முன்பாக கடந்த மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரண்டு இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த இரண்டு சந்தேகநபர்கள் பொலிஸில் சரணடைந்த நிலையில், கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு சரணடைந்தவர்களில் துப்பாக்கிதாரியும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாத்தறை – தெவுந்தர பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ விஷ்ணு தேவாலயத்தின் தெற்கு வாஹல்கடவிற்கு முன்பாக உள்ள சிங்காசன வீதியில் கடந்த 21 ஆம் திகதி இரவு 11.45 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரண்டு இளைஞர்கள் கொல்லப்பட்டனர்.
மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த குறித்த இரண்டு இளைஞர்கள் மீது, வேன் ஒன்றில் வந்த அடையாளம் தெரியாத துப்பாக்கிக்காரர்களே இந்தத் தாக்குதலை நடத்தியிருந்தனர். தாக்குதலில், தெவிநுவர சிங்காசன வீதியை சேர்ந்த யோமேஷ் நதிஷான் மற்றும் பசிந்து தாருக என்ற இரண்டு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
இச் சம்பவம் குறித்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த படுகொலை சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த இரண்டு சந்தேக நபர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேக நபர்கள் இரண்டு சட்டத்தரணிகளுடன் கந்தர பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களில் ஒருவர் பிரதான துப்பாக்கிதாரி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 26 மற்றும் 35 வயதுடைய, கந்தர மற்றும் தேவேந்திர முனைபிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தத் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.