கிழக்கு மாகாண பல்கலைக்கழகத்தின் உபவேந்தரான பேராசிரியர் சிவசுப்ரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பிள்ளையான் என்றழைக்கப்படும் முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் நேற்றிரவு 8 மணியளவில் அவரது கட்சி அலுவலத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார்.
…
கொழும்பில் நடைபெற்ற வருடாந்த மாநாடு ஒன்றில் கலந்துகொள்வதற்காக சென்றிருந்த கிழக்கு மாகாண பல்கலைக்கழகத்தின் உபவேந்தரான பேராசிரியர் சிவசுப்ரமணியம் ரவீந்திரநாத கடந்த 2006 ஆம் ஆண்டு டிசம்பர் 15ஆம் திகதி காணாமலாக்கப்பட்டிருந்தார்.
இச் சம்பவத்தின் பிரதான சந்தேக நபரான பிள்ளையான் சுமார் 18 வருடங்களுக்குப் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிழக்கு பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்துக்கான தலைவரான மு. பால சுகுமாரை கடந்த 2006 ஆம் ஆண்டு செப்டெம்பர் 30 ஆம் திகதி கடத்திய ஆயுதக் கும்பல், சிவசுப்ரமணியம் ரவீந்திரனாத்தை உபவேந்தர் பதவியிலிருந்து உடனடியாக விலகுமாறு அச்சுறுத்தியது.
அதற்கமைய, உபவேந்தர் ரவீந்திரநாத் தனது இராஜினாமா கடிதத்தை எழுத்துப்பூர்வமாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு அறிவித்திருந்தார். எனினும், அவரது இராஜினாமாக் கடிதத்தை ஏற்றுக்கொள்ளாது அவரை கொழும்பில் இருந்து தமது கடமைகளை செய்யுமாறு அறிவிக்கப்பட்டிருந்தது.
உபவேந்தருக்கு உயிரச்சுறுத்தல் இருந்தமையால் கொழும்பு, தெஹிவளையில் உள்ள அவரது மகளின் வீட்டிலேயே வசித்து வந்ததுடன், சில தேவைகளுக்காக வெளியில் செல்வதாக இருந்தால் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்துவிட்டு வெளியில் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
எனினும், 2006 ஆம் ஆண்டு டிசம்பர் 15 ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற மாநாட்டுக்கு சென்றுவிட்டு மதிய உணவுக்காக வீட்டுக்கு வருவதாகக் கூறியிருந்த உபவேந்தர் காணமலாக்கப்பட்டிருந்தார். பேராசிரியர் பற்றிய தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை என்பதால் இது பற்றி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கும் அன்றைய தினம் மாலை 7 மணியளவில் தெஹிவளை பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதனையடுத்து குறித்த விசாரணை குற்றப்புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்பட்டு விசாரணை முன்னெடுக்கப்பட்ட போது, பிள்ளையானின் ஆதரவாளர்கள் என சந்தேகிக்கப்படுவோரினாலேயே குறித்த பேராசிரியர் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதற்கிணங்க, தொடர்;ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கு அமைய கிடைக்கப்பெற்ற சாட்சியங்களின் அடிப்படையிலேயே நேற்று இரவு பிள்ளையான் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டமைக்கு மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பகுதியில் பட்டாசு கொழுத்தி மக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
அதன்படி, களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் இளைஞர்களினால் நேற்றிரவு பட்டாசு கொழுத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.