முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இன்று (09) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முன்னிலையானார்.
தரமற்ற இம்யூன் குளோபுலின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக வாக்குமூலங்களைப் பதிவு செய்ய அவர் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு ஆஜரானதாகத் தெரிவிக்கப்படுகிறது.
முன்னதாக, இந்த விவகாரம் தொடர்பாக கெஹெலிய ரம்புக்வெல்ல 07 மாதங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
அதன் பிறகு அவருக்கு பிணை வழங்கப்பட்டது.
இரண்டு மூத்த அரச அதிகாரிகளின் உதவியுடன் போலி ஆவணங்களை உருவாக்கி 22,500 தரமற்ற இம்யூன் குளோபுலின் தடுப்பூசி குப்பிகளை ஒரு மருந்து நிறுவனம் இறக்குமதி செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து சிஐடி விசாரணையைத் தொடங்கிய பின்னர், அவர் பல சுகாதார அமைச்சக அதிகாரிகளுடன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
கெஹெலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராக இருந்த காலத்தில், மேற்படி தரமற்ற மருந்தை இறக்குமதி செய்ததன் மூலம் ரூ.130 மில்லியன் நிதி மோசடி நடந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.