ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் அணி திரில் வெற்றியை பதிவு செய்துள்ளது. குறைந்த ஓட்ட இலக்கினை வழங்கியபோதும் பஞ்சாப் கிங்ஸ் அணி 16 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
நடைபெற்று வருகின்ற ஐபிஎல் போட்டி ஒன்றில் இரண்டு அணிகளால் கூட்டாக பெறப்பட்ட மிகக் குறைந்த மொத்த ஓட்ட எண்ணிக்கையான நேற்றைய போட்டி பதிவாகியுள்ளது. குறிப்பாக இரண்டு அணிகளும் சேர்ந்து, 206 ஓட்டங்களையே பெற்றிருந்தன.
மல்லன்பூர், சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற்ற நேற்றைய போட்டியில் பந்துவீச்சாளர்களே ஆதிக்கம் செலுத்தியிருந்தனர்.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த பஞ்சாப் கிங்ஸ் 15.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 111 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. கொல்கத்தா அணி சார்பாக பந்துவீச்சில் ஹர்ஷித் ராணா 25 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் சுனில் நரேன் 14 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வருண் சக்ரவர்த்தி 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
இதனை தொடர்ந்து 112 ஓட்டங்கள் என்ற இலகுவான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சகல விக்கெட்களையும் இழந்து 95 ஓட்டங்களை மாத்திரம் பெற்று மோசமான தோல்வியை பதிவு செய்தது. அணித் தலைவர் அஜின்கியா ரஹானே 17 ஓட்டங்களையும் அங்க்ரிஷ் ரகுவன்ஷி 37 ஓட்டங்களையே அதிகபட்சமாக பெற்றுக்கொண்டனர்.
பஞ்சாப் கிங்ஸ் சார்பில் பந்துவீச்சில் யுஸ்வேந்த்ர சஹால் 28 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் மார்க்கோ ஜென்சன் 17 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். போட்டியன் ஆட்டநாயகனாக யுஸ்வேந்த்ர சஹால் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.