2025 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் நேற்றிரவு (26) நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் (PBKS) மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணிகளுக்கு இடையிலான போட்டி மழையால் பாதிக்கப்பட்டு, எதுவித முடிவின்றி கைவிடப்பட்டது.
நடப்பு ஐ.பி.எல். சீசனில் மழையால் பாதிக்கப்பட்ட நிலையில் போட்டி ஒன்று கைவிடப்பட்ட முதல் ஆட்டமாகவும் இது அமைந்தது.
ஈடன் கார்டன்ஸில் இந்திய நேரப்படி நேற்றிரவு 07.30 மணிக்கு ஆரம்பமான இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியானது முதலில் துடுப்பெடுத்தாடியது.
அதன்படி, அவர்கள் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 201 ஓட்டங்களை பெற்றனர்.
பஞ்சாப் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான பிரப்சிம்ரன் சிங் 49 பந்துகளில் 83 ஓட்டங்களையும், பிரியான்ஷ் ஆர்யா 35 பந்துகளில் 69 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றனர்.
கொல்கத்தா அணிக்காக, வைபவ் அரோரா அதிகபடியாக 02 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர், 202 என்ற இலக்கினை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அஜிங்க்யா ரஹானே தலைமையிலான கொல்கத்தா அணியானது ஒரு ஓவர்களை மாத்திரம் எதிர்கொண்டு 07 ஓட்டங்களை பெற்றிருந்த வேளையில் மழை குறுக்கிட்டது.
இதனால், போட்டி இடைநிறுத்தப்பட்டதுடன், தொடர்ந்தும் மழை விடாது பெய்தமையினால் ஆட்டம் எதுவித முடிவின்றி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதன் விளைவாக, இரு அணிகளும் தலா ஒவ்வொரு புள்ளிளை பகிர்ந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.