ஈரானின் மிகப்பெரிய துறைமுகமான பந்தர் அப்பாஸில் (Bandar Abbas) நேற்றைய (26) தினம் ஏற்பட்ட ஒரு பெரிய வெடிப்பு சம்பவத்தில் குறைந்தது 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், இந்த அனர்த்தத்தில் 700 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக ஈரானிய அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சனிக்கிழமை காலை தெற்கு நகரமான பந்தர் அப்பாஸுக்கு அருகிலுள்ள நாட்டின் மிகப்பெரிய வணிகத் துறைமுகமான ஷாஹித் ராஜீயிலேயே இரசாயனக் கசிவு காரணமாக இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இது அருகிலுள்ள கட்டிடங்களின் ஜன்னல்கள் மற்றும் கூரைகளை வெடிக்கச் செய்து பல வாகனங்களை அழித்ததுடன், வெடிப்பின் தாக்கத்தை 50 கிலோ மீற்றர் தொலைவில் உணர்ந்ததாக குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர்.
ஈரான் அமெரிக்காவுடன் ஓமானில் மூன்றாவது சுற்று அணுசக்தி பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ள நிலையில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
எனினும், இரண்டு நிகழ்வுகளுக்கும் இடையே ஒரு தொடர்பு இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்று ஈரானிய அதிகாரிகள் கூறுகின்றனர்.
ஷாஹித் ராஜீயில் உள்ள கொள்கலன்களில் இரசாயனங்களை மோசமாக சேமித்து வைத்ததே வெடிப்புக்குக் காரணம் என்று ஈரானின் அவசரகால மேலாண்மை அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஹொசைன் ஜஃபாரி குற்றம் சாட்டியுள்ளார்.
எவ்வாறெனினும், சம்பவம் குறித்து விசாரணை நடத்த ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன் உத்தரவிட்டதுடன், தீயை அணைக்கவும், ஏனைய பகுதிகளுக்கு தீ பரவாமல் தடுக்கவும் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.
ஹோர்மோஸ் நீரினைக்கு அருகில் அமைந்துள்ள ஷாஹித் ராஜீ துறைமுகம் ஈரானின் மிகப்பெரிய கொள்கலன் மையமாகும்.
இது நாட்டின் பெரும்பாலான கொள்கலன் பொருட்களைக் கையாளுகிறது என்று அரசு ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

















