போப் பிரான்சிஸ்ஸின் மறைவைத் தொடர்ந்து புதிய போப்பைத் தெரிவு செய்வதற்கான பணிகள் எதிர் வரும் மே மாதம் 7 ஆம் திகதி ஆரம்பமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கத்தோலிக்க திருச்சபை தலைவராக இருந்த போப் பிரான்சிஸ், உடல் நலக்குறைவால் தனது 88 ஆவது வயதில் கடந்த 21 ஆம் திகதி மரணம் அடைந்தார். இதனையடுத்து அவரது உடல் கடந்த 26ஆம் திகதி ரோமில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
88 வயதான போப் பிரான்சிஸ் மறைவைத் தொடர்ந்து புதிய போப் யார்? என்ற எதிர்பார்ப்பு உலகம் முழுவதும் எழுந்துள்ளது. இதற்கு விடை காணும் முயற்சியில் வத்திக்கான் ஈடுபட்டு வருகின்றது.
அதன்படி கார்டினல் எனப்படும் கர்தினால்கள் நேற்று கூடி இது குறித்து ஆலோசனை நடத்தினர். அப்போது புதிய போப்பை தேர்வு செய்வதற்கான கர்தினால்களின் கான்கிளேவை (மாநாடு) அடுத்த மே மாதம் 7ஆம் திகதி நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
உலகம் முழுவதும் 252 கர்தினால்கள் உள்ள நிலையில், போப்பைத் தேர்வு செய்வதற்கான வாக்களிக்கும் தகுதி படைத்த 80 வயதுக்கு உட்பட்டவர்கள் 135 பேர் உள்ளனர் எனவும், அவர்கள் தங்களுக்குள்ளே இருந்து ஒருவரை புதிய போப் ஆக தேர்வு செய்வார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.