பஹல்காம் தாக்குதலின் எதிரொலியாக தமிழ்நாடு முழுவதும் பாஜக சார்பில் இன்று கவன ஈர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக குடியேறிய பாகிஸ்தான், வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் வெளியேற்ற வேண்டும் எனத் தெரிவித்தே இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் உள்ள பிரபல சுற்றுலா தலத்தில் கடந்த 22ஆம் திகதி லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பின் கிளை அமைப்பான The Resistance Front (TRF) நடத்திய பயங்கரவாதத் தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
குறித்த தாக்குதல் சம்பவம் சர்வதேச ரீதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் மூழும் சூழ்நிலையும் உருவாகியுள்ளது.
இந்நிலையில் தமிழக பா.ஜனதா மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று வெளியிட்ட அறிக்கையில், பஹல்காம் தாக்குதலை கண்டித்தும், பாகிஸ்தான் வங்கசேத்தை சேர்ந்த சட்டவிரோத குடியேறிகளை தொடர்ந்து அடையாளம் கண்டு வெளியேற்றுவதிலும் தமிழக அரசு மும்முரமாக செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும், ராணுவத்தின் மீதும் தேச பாதுகாப்பின் மீதும் வதந்திகளை பரப்பும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் பா.ஜனதா சார்பில் இன்று (திங்கட்கிழமை) கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெறுவதாக அவர் அறிவித்துள்ளார்.
இதேவேளை காஷ்மீர் – பஹல்காம் தாக்குதலைக் கண்டித்து, பாஜக சார்பில் கோவையில் நடக்கும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் அண்ணாமலை பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.