“இரட்டை-பயன்பாட்டு” ஆராய்ச்சி என்று அழைக்கப்படும் சர்ச்சைக் குறிய உயிரியல் ஆராய்ச்சிக்கு வழங்கப்படும் நிதியைக் கட்டுப்படுத்துவது தொடர்பான உத்தரவொன்றை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் திங்களன்று (05) பிறப்பித்தார்.
குறித்த ஆராய்ச்சியானது தொற்றுநோயைத் தூண்டும் திறன் கொண்ட வைரஸ்கள் மற்றும் பிற நோய்க்கிருமிகள் தொடர்பாக மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சி எனத் தெரிவிக்கப்படுகின்றது.
தொற்றுக் கிருமிகள் எவ்வாறு அதிகமாக பரவக்கூடும் அல்லது மக்களை நோய்வாய்ப்படுத்தக்கூடும் என்பதை இந்த ஆய்வுகள் மூலம் கண்டறிய முடியும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறு இருப்பினும் விஞ்ஞானிகள் தங்கள் ஆய்வகத்தில் மிகவும் ஆபத்தான நோய்க்கிருமியை உருவாக்கி, அது வெளியேறி ஒரு தொற்றுநோயை ஏற்படுத்தக்கூடும் என்ற அச்சத்தின் காரணமாக இந்தத் துறை நீண்ட காலமாக சர்ச்சைக்குரியதாக இருந்து வருகிறது.
இந்த ஆராய்ச்சியை இன்னும் இறுக்கமாகக் கண்காணித்து கட்டுப்படுத்த பல ஆண்டுகளாக பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
COVID-19 தொற்றுநோய் காலத்தில் இவ்வகை ஆராய்ச்சிகள் ஆராய்ச்சி ரீதியாக மட்டுமன்றி அரசியல் ரீதியாகவும் சர்ச்சைக்குரியதாக மாறியது.
குறிப்பாக COVID-19 ஐ ஏற்படுத்தும் SARS-CoV2 வைரஸ், சீனாவின் வுஹானில் உள்ள ஒரு சீன அரசாங்க ஆய்வகத்திலிருந்து பரவியதாகக் கூறப்பட்டது.
அத்துடன் COVID தொற்றுநோய்க்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகவும் குறித்த ஆராய்ச்சி கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது