ஜேர்மனியின் புதிய சேன்சலராக கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியின் (CDU) தலைவர் ஃபிரிடிரிக் மெர்ஸ் Friedrich Merz இன்று தெரிவு செய்யப்படுவார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் அவர் தேர்ந்தெடுக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜேர்மனியில் கடந்த பெப்ரவரி மாதம் தேர்தல் முடிவடைந்த போதிலும் கூட்டணி பேச்சுவார்த்தைகள் முதலான சில காரணங்களால் ஆட்சியமைப்பதில் பல்வேறு தாமதம் ஏற்பட்டுவந்தது.
இந்நிலையில் 208 இருக்கைகளை வென்ற CDU/CSU கட்சியும், 120 இருக்கைகளை வென்ற SPD கட்சியும் இணைந்து ஆட்சி அமைக்க முடிவு செய்தன.
அந்தவகையில் இன்று ஜேர்மனியில் புதிய அரசு ஆட்சி அமைக்க உள்ளதாகவும் உள்ளூர் நேரப்படி இன்று காலை 9.00 மணிக்கு ஜேர்மனியின் நாடாளுமன்றம் கூடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அத்துடன் இதன்போது பிரெட்ரிக் மெர்ஸின் பெரும்பான்மையை நிரூபிக்க வாக்கெடுப்பு நடத்தப்படும் எனவும் பெரும்பான்மையை அவர் நிரூபித்த பின்னர் ஃபிரிடிரிக் மெர்ஸை ஜேர்மனியின் 10ஆவது சேன்ஸலராக ஜனாதிபதி உறுதி செய்வார் எனவும் கூறப்பட்டது.
இந்நிலையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற வாக்கெடுப்பில் ஃபிரிடிரிக் மெர்ஸ்ஸுக்கு தேவையான 316 வாக்குகள் கிடைக்கவில்லை எனவும், இதனால் அவர் சேன்சலராகத் தேர்ந்தெடுக்கப்படவில்லை எனவும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் வலது சாரி கட்சியான ஆல்டர்நடிவ் ஃபியூர் டெயுச்ச்லாந்து புதிய தேர்தல்களை நடத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளது.
அத்துடன் ஜேர்மனியின் முன்னாள் சேன்சலர் ஓலாப் ஷோல்ஸ் (Olaf Scholz ) தற்காலிக சேன்சலராகத் திகழ்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.