கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் மத தலைவரான பாப்பரசர் பிரான்சிஸ் (வயது 88) கடந்த மாதம் 21ஆம் திகதி உடல்நல குறைவால் மரணம் அடைந்தார். பாப்பரசர் பிரான்சிஸ் மறைவை தொடர்ந்து புதிய பாப்பரசரை தேர்வு செய்யும் மாநாடு இன்று (07) தொடங்கும் என்று வத்திக்கான் அறிவித்தது.
அதன்படி இன்று(07) பாப்பரசர் தேர்வு தொடங்குகிறது. வத்திக்கானில் உள்ள 16ஆம் நூற்றாண்டை சேர்ந்த பாரம்பரியமிக்க சிஸ்டைன் சேப்பல் தேவாலயத்தில் புதிய பாப்பரசரை தேர்ந்தெடுப்பதற்கான இரகசிய ஆலோசனை கூட்டமும், வாக்கெடுப்பும் நடைபெறுகின்றது.
இதற்காக வத்திக்கானில் 250 கர்தினால்கள் குவிந்துள்ளனர். ஆனால் 80 வயதிற்குட்பட்ட 133 கர்தினால்கள் மட்டுமே புதிய பாப்பரசரை தேர்வு செய்யும் தேர்தலில் பங்கேற்று வாக்களிப்பார்கள்.
வாக்கெடுப்பில் பங்கேற்க உள்ள கர்தினால்கள் சிஸ்டைன் தேவாலயத்திற்குள் செல்வதற்கு முன்னர், பைபிள் மீது கை வைத்து இரகசிய காப்பு உறுதி மொழி எடுத்துக்கொள்வார்கள்.
கர்தினால்களை தவிர இரண்டு அவசர கால வைத்தியர்கள், கார்டினால்களுக்கு சமைக்கும் நபர்கள் மட்டுமே சிஸ்டைன் தேவாலயத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். கர்தினால்கள் உள்பட சிஸ்டைன் தேவாலயத்திற்குள் செல்லும் அனைவரும் வெளி உலக தொடர்பை நீக்க வேண்டும்.
புதிய பாப்பரசர் ஆக தேர்வு செய்யப்படுபவருக்கு 3இல் 2 பங்கு பெரும்பான்மை கிடைக்கும் வரை பல்வேறு கட்ட வாக்கெடுப்புகள் நடை பெறும். ஒவ்வொரு கர்தினால் வாக்காளரும் தாம் விரும்பும் வேட்பாளரின் பெயரை வாக்குச் சீட்டுகளில் எழுதி தங்களது வாக்குகளை அளிப்பார்கள்.
போப் தேர்தலில் இந்தியாவைச் சேர்ந்த பிலிப் நேரி பெராவ், பசேலியோஸ் கிளீமிஸ், அந்தோனி பூலா, ஜோர்ஜ் ஜேக்கப் கூவக்காட் ஆகிய 4 கர்தினால்கள் வாக்களிக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.