பஹல்காம் சம்பவத்தை தொடர்ந்து இந்தியா நடத்திய ஒபரேஷன் சிந்துார் நடவடிக்கைக்கு பின்னர் பிரதமர் மோடி, இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்கள் மத்தியில் உரையாற்றுகிறார்.
கடந்த ஏப்ரல் 22ஆம் திகதி ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள், சுற்றுலாப்பயணிகள் மீது தாக்குதல் நடத்தினர்.
இந்த சம்பவத்தில் 26 பேர் கொல்லப்பட்டதுடன் இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது.
இதனையடுத்து, பயங்கரவாதிகளுக்கு துணைபோன பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு அதிரடி நடவடிக்கையை இந்தியா எடுத்திருந்தது.
பாகிஸ்தானிலும் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் செயல்பட்ட பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியது.
இந்நிலையில், பாகிஸ்தானுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் பற்றி பொதுமக்கள் மத்தியில் விளக்கம் அளிப்பதற்காக, இந்திய நேரத்தின்படி இன்று இரவு எட்டு மணிக்கு நாட்டு மக்கள் மத்தியில் பிரதமர் மோடி உரை நிகழ்த்த உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஒபரேஷன் சிந்துார் நடவடிக்கைக்கு பிறகு நாட்டு மக்களிடம் முதன் முறையாக இன்று இரவு பிரதமர் மோடி உரை நிகழ்த்த உள்ளார்.
இதேவேளை, பாகிஸ்தான் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை, போர் நிறுத்தம் பற்றி பல்வேறு சந்தேகங்களுக்கு விடை அளிக்கும் வகையில் பிரதமர் உரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.