தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லோலுவவின் வாகனம் மீது நேற்று இரவு (17) நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் சி.சி.டி.வி காட்சிகளை ஆராய்ந்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவு மற்றும் நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலையத்தை சேர்ந்த நான்கு குழுக்கள் குறித்த சி.சி.டி.வி காட்சிகளை ஆராய்ந்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை(18) சம்பவ இடத்திற்கு சென்ற தடயவியல் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் அறிவுறுத்தலின் பேரில் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையில், கடந்த மே 2 ஆம் திகதி ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, வெளிநாட்டில் பணத்தை முதலீடு செய்ததாக அவர் வெளியிட்ட கருத்தால் சர்ச்சை ஏற்பட்டிருந்ததுடன் அது தொடர்பாக ஹல்லோழுவ 15ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில் சுமார் 7 மணித்தியாலங்கள் அவர் வாக்குமூலம் வழங்கியிருந்தார்.
இதனை தொடர்ந்து நேற்றிரவு அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ள பின்னணி தொடர்பாக பாரிய சந்தேகங்கள் தோன்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று இரவு நாரஹேன்பிட்டி சுற்றுவட்ட வீதியில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு அருகில் துசித ஹல்லோலுவ பயணித்த ஜீப் வண்டி மீது துப்பாக்கிச் சூடு நடத்தபட்டதுடன் அவரிடம் இருந்த கோப்புகளும் துப்பாக்கி தாரிகளால் எடுத்துச்செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.